சித்திரவதை கூடாது – கைதுக்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி அறிவுறுத்து

torture

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் எந்த வகையிலும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடாதென, பொலிஸார் மற்றும் படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தோடு, ஒருவர் கைதுசெய்யப்படும்போது, அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். கைதுசெய்வதற்காக செல்லும் அதிகாரி, தமது பெயர், பதவி மற்றும் தரம் உள்ளிட்ட விபரங்களை கைதுசெய்யப்படுபவரின் உறவினர் அல்லது நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கைதுசெய்யப்படும் இடமும் குறிப்பிடப்பட்டு ஒரு ஆவணத்தை வழங்கவேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில், ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்டு இந்த அறிவுறுத்தல் அடங்கிய அறிக்கை பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்தோடு, பெண்கள் தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயும்போது, அவை பெண் அதிகாரிகளால் மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், அவர்களின் மரியாதைக்கு களங்கம் ஏற்படாமல், உடல் உள ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் அது உடனடியாக பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்றும், போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென்றும், கைதுசெய்யப்படுபவர்கள் வழக்கறிஞரை சந்திப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலுல் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையொன்றை ஐ.நா ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்ட பலர், தம்மை கைதுசெய்தவர்கள் யாரென அடையாளம் காணப்பட முடியாத சூழல் காணப்பட்டது. அத்தோடு கைதுசெய்யப்படுபவர்கள் தடுப்பு நிலையங்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதேவேளை, விசாரணைகளின்போது குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் ஆகியோர் கைதிகளை துன்புறுத்துவதாக, அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்களான ஜூவான் ஈ மெண்டிஸ் மற்றும் மோனிகா பின்டோ ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.torture
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila