திசிதரனை கைதுசெய்வது சுமூக நிலையை பாதிக்கும் : நீதிமன்றில் சுமந்திரன் (4ஆம் இணைப்பு)

யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில், பல்கலையின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன், இன்று யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில், திசிதரன் தரப்பு சட்டத்தரணியாக ஆஜராகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஊடகங்களிடம் இவ்விடயத்தை தெரிவித்தார்.
மோதலில் காயமடைந்த 4 மாணவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திசிதரனை கைதுசெய்வதற்கு பொலிஸார் முற்பட்டதாகவும், எனினும் குறித்த கைது நடவடிக்கை தடுக்கப்பட்டு இன்று அவர் தாமாகவே நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
காயமடைந்த மாணவன் வழங்கிய வாக்குமூலம் தாமதமாக வழங்கப்பட்ட வாக்குமூலம் என்பதை தாம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும், மோதல் குறித்து வெளியான காணொளியில் திசிதரன் அவ்வாறு யாரையும் தாக்கவில்லையென்றும், அவர் தாக்கப்பட்டமையே அதிகம் என்பதையும் தாம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு (3ஆம் இணைப்பு)


 
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திசிதரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இன்று காலை திசிதரன் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில், தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் நீதவான் சதீஸ்கரன் அவரை விடுவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, கோப்பாய் பொலிஸில் வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் பணித்தார்.
அத்தோடு, தாமும் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டுமென மாணவர் ஒன்றியத் தலைவர் கேட்டுக்கொண்டமைக்கமைய, அதற்கான அனுமதியையும் நீதவான் வழங்கினார்.
மாணவர் ஒன்றியத் தலைவர் தரப்பு சட்டத்தரணியாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் ஆஜர் (2ஆம் இணைப்பு)
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன், இன்று (புதன்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, சிங்கள மாணவர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்.பல்கலையின் மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் சில தமிழ் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இதனடிப்படையில், நேற்று கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் வரவழைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன், யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிமனைக்கு திசிதரன் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டுமென பொலிஸார் தெரிவித்தமைக்கமைய, இன்று அவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக விவகாரம் : தமிழ் மாணவர்களை கைதுசெய்ய நடவடிக்கை?
யாழ்.பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில், மூன்று தமிழ் மாணவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவருதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலில் காயமடைந்து கொழும்பு சென்ற சிங்கள மாணவன் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த தமிழ் மாணவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரை விசாரணைக்கு வருமாறு, கோப்பாய் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில மாணவர்களின் நடவடிக்கை காரணமாகவே குறித்த மோதல் சம்பவம் ஏற்பட்டதென்றும், இதற்கு அரசியல் பின்புலமும் காரணமாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்ற நிலையில், குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்படுமிடத்து தற்போதைய சுமூக நிலை பாதிக்கப்படலாமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள், இன்று பகுதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.jaffna campus issue  (1) jaffna campus issue  (2) jaffna campus issue  (3)
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila