யுத்தம் முடிந்து நல்லிணக்கத்தை பற்றி பேசும் அரசாங்கம் வடக்கு கிழக்கில் சத்தம் இல்லாமல் சிங்களமயமாக்கலை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் பிரதேசங்களில் சிங்கள பாரம்பரிய ங்கள் திணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் நடைபெற்ற போர் க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை ஒன்று வந்தால் அதனை ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும், அதற்கெதிராக புலத்திலும், நிலத்திலும் பாரிய போராட்டங்களை தாம் முன்னெடுப்போம் எனவும், இந்த விடயத்தில் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக்கட்சிகளும் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பல்கலையில் நடைபெற்ற சம்பவத்தின் பின்னரான காலத்தில் தென்னிலங்கையை சேர்ந்த பல அமைப்புக்கள் வடக்கு கிழக்கில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இராணுவம் தான் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.
இவர்களுக்கு பின்னால் யாரோ இருந்து கொண்டு தான் இவற்றை எல்லாம் செய்விக்கின்றனர். இதுதான் யாழ்.பல்கலையிலும் நடைபெற்றது. அதனை முற்கூட்டியே கண்டறிந்திருக்க வேண்டும். அப்பாவி மாணவர் களை தண்டிப்பதை விடுத்து தூண்டியவர்கள் யாரென கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும். இலங்கையில் பதினேழு பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில் மூன்று பல்கலைக்கழங்கள் வடக்கு கிழக் கில் உள்ளன. இந்த மூன்று பல்கலைக் கழங்களை ஏனையவை போன்று முழுமையாக சிங்கள மயமாக்க அரச இயந்திரம் முயற்சிக்கின்றதா? என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையா? உள்நாட்டு விசாரணை தேவையா? என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை. அவர் நேரத்திற்கு நேரம் ஒவ்வொரு கதை கதைத்துக்கொண்டு உள்ளார். ஆகையால் தமிழரசு கட்சியும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெளிவாக கூற வேண்டும்.
ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஒருபோதும் உள்நாட்டு விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. இதனை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகவே கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தமது நிலைப்பாட்டை உடன் அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.