வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கையையும் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன.
இலங்கையின் ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் மத்திய கிழக்குக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நிர்மாணப்பணிகளுக்காகவும் ஆடை தொழிற்சாலைகளுக்காகவும், வீட்டுப்பணியாளர்களாகவும் அனுப்பப்படுகின்றனர்.
இதன்போது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் இலங்கையர்கள் வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு பெருந்தொகை பணத்தை செலுத்தவேண்டியேற்படுகிறது.
இந்நிலையில் அனுமதிப்பெற்ற முகவர் நிறுவனங்களும் அனுமதிப்பெறாத உபமுகவர் நிலையங்களும் இயங்குகின்றன.
இதனால் அவர்கள் பாரிய கடன்களுக்கு ஆளாகவேண்டியுள்ளது. சில முகவர் நிறுவனங்களும் முறைக்கேடான விதத்தில் செயற்படுகின்றன.
இதன்காரணமாக பலருக்கு உரிய வேதனங்கள் கிடைப்பதில்லை. ஜோர்தான், மாலைத்தீவுகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சில இலங்கைப்பெண்கள் பாலியல் தொழிலுக்கு பலவந்தப்படுத்தப்படுகின்றனர்.
இலங்கையின் உள்நாட்டிலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடசெய்யப்படுகின்றனர்.
கரையோர சிறுவர்களும் சிறுமிகளும் பலவந்தமாக பாலியல் தொழிலுக்கு உந்தப்படுகின்றனர். சிலர் பிச்சை எடுப்பதற்கும் அல்லது குற்றச்செயல்களை செய்வதற்கும் இதன் காரணமாக தூண்டப்படுகின்றனர்.
கொழும்பிலும், இலங்கையின் பெரிய நகரங்களிலும் பெருந்தோட்டப்புறங்களை சேர்ந்த தமிழ் சிறுவர்களும் பெண்களுமே வேலையாட்களாக சேர்க்கப்படுகின்றனர்.
இதன்போது அவர்கள் மனரீதியாகவும், உரிய வேதனம் கிடைக்காமலும், நடமாட்ட சுதந்திரம் அற்றவர்களாகவும் நடத்தப்படுகின்றனர்
இதேவேளை மத்திய ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய இடங்களில் உள்ள சில பெண்கள், இலங்கையில் அண்மைய வருடங்களாக பாலியல் தொழிலுக்கு பலவந்தப்படுகின்றனர்.
பொலிஸார் கப்பம் பெற்றுக்கொண்டு விபச்சார விடுதிகளை அனுமதிக்கின்றனர். இந்நிலையில் மனித கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசாங்கம் ஆகக்குறைந்த
தரத்தைக்கொண்ட தவிர்ப்பு நடவடிக்கைகளை கூட எடுக்கவில்லை என்று அமெரிக்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
இதன்காரணமாக நான்காவது தொடர் வருடமாகவும் டயர் 2 (Tier 2) கண்காணிப்பு பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.