இறுதிபோரில் கொத்து குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் அது தவறில்லை!

mexwel

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக் குண்டுகளை இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும், அது சட்டவிரோதமானது அல்லவென, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதி கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கொத்து குண்டுகளுக்கு, சர்வதேச ரீதியிலான தடை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும், மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டினார்.
கொத்துக்குண்டுகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவிற்கு வந்ததன் பின்னர், 2010ஆம் ஆண்டு ஒகஸ்ட் முதலாம் திகதியே, பேரழிவை ஏற்படுத்தக் கூடிய கொத்து குண்டுகள் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்டதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும் 2008 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்து தலைநகர் டப்லினில் கொத்து குண்டு பாவனை தடைசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி சாசனமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனை அடுத்து உலகில் பெரும்பாலான நாடுகள் யுத்தத்தின் போது கொத்து குண்டுகளை பயன்படுத்துவதில்லை என்று கொள்கை ரீதியில் உடன்பாட்டையும் எட்டியிருந்தன.
இந்நிலையில், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது, கொத்தக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைத் தொடர்பில், தகவல் வெளியாகியது. இறுதியாக வன்னியில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ ட்ரெஸ்ட் தொண்டு நிறுவனத்தை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகையான ‘த கார்டியன்’ இவ்வாறு தகவல் வெளியிட்டிருந்ததுடன், அதற்கு ஆதாரமாக புகைப்படங்களையும் வெளியிட்டது.
இந்த நிலையிலேயே இறுதிக் கட்ட யுத்தத்தில் இலங்கை படையினரால் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம, அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது தவறு அல்லவெனவும் கூறியுள்ளார்.
எனினும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கு, நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிடும் அவர், கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து சுயாதீனமானதும் பாரபட்சம் அற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹூசைனிடம் வலியுறுத்தியிருந்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila