
தமிழன் என்ற போர்வையில் தமிழருக்கு எதிரான செயற்பாடுகளை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கொண்டுவருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டி.எம்.சுவாமிநாதன் அமைச்சராக பதவியேற்ற பின்னர் தமிழ் மக்களுக்காக 8 ஆயிரம் மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,
அவ்வாறு குறித்த தொகை செலவளிக்கப்பட்டிருந்தால் இலங்கை தற்போது சிங்கப்பூர் போன்று மாறியிருக்கும் என தெரிவித்தார்.
இதுமட்டுமன்றி 4 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைத்தது போன்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு பொய் சொல்வதற்காக காலம்காலமாக உருவாகின்ற கதிர்காமர் போன்று தற்காலத்தில் சிங்களவனுக்கு அடிமை விசுவாசியாக சுவாமிநாதன் செயற்படுவதாகவும் அவர் இதன்போது குற்றம்சுமத்தினார்.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 40 வீதமான காணிகள் இராணுவம் வசம் காணப்படுகின்றன. இதுமட்டுமன்றி முல்லைத்தீவில் பொதுமக்களது காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுவருகின்றன.
எனினும் யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவிக்கின்றோம் என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது மௌனம் காக்கின்றார்.
ஸ்ரீலங்காவில் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதிள் இவ்வாறு வாக்குறுதிகளை வழங்குவார்களே ஒழிய அதனை நிறைவேற்றியதில்லை.சர்வதேசம் கூட தமிழர்களது பிரச்சினைகளில் மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கின்றது. இது தமிழர்களை அழிப்பதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சியா என எண்ணத்தோன்றுகின்றது.
குறிப்பாக சிங்கள ஏகாதிபத்தியத்துடன் இருப்போர் ஒருபோதும் தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தப்போவதில்லை.எனவே வெளிப்படையாக தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றார்களா என்பதை பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்தியே கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவித்தார்.