தமிழ்ப் பழமொழிகளின் கருத்துச் செறிவு பற்றி ஆறுதலாக இருந்து ஆராய்ந்தால் அதன் தத்து வார்த்தம் பட்டவர்த்தனமாகப் புரியும்.
அந்தளவிற்கு தமிழ்ப் பழமொழிகள் மிகச் சிறந்த தத்துவ விசாரங்கள். எனினும் இன்றைய சூழ்நிலையில் பழமொழிகள் பற்றி எவரும் கருசனை கொள்வதில்லை.
வாழ்க்கையின் தத்துவத்தையே மறந்து போன போது தமிழ்ப் பழமொழிகளை மறந்து போவது ஆச்சரியமான விடயமன்று.
இருந்தும் ரோசம் கெட்டவன் ராசாவிலும் பெரி யவன் என்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் உண்டு. அதன் பொருள் ஆழமானது. ரோசம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஒருவன் நினைப்பானாக இருந்தால், அவன் சிலவற்றை செய்ய முடியாமல் போகும்.
இப்படித்தான் வாழ்தல் என்ற எல்லைக் கோடுகள் அவனின் எல்லை தாண்டலைத் தடுக்கும். எனவே ரோசம் உள்ளவர்கள் ஒரு கட்டத்திற்கு அப்பால் தங்களின் மானம் குறித்தே சிந்திப்பர்.
இத்தகையவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நினைப்பை கடுமையாகப் பின் பற்றுபவார்கள்.
ஆனால் ரோசம் கெட்டவர்கள் யார் என்ன பேசினாலும் அது பற்றி ஒருபோதும் கவலை கொள்ளமாட்டார்கள். அவனவன் பேசி விட்டுப் போகட்டுமே! நாம் நம்ம வேலை என்பதாக இவர்களின் காலம் கடந்து போகும். இத்தகையவர்கள் பொய் சொல்லவோ, திருகுதாளம் போடவோ ஒரு நாளும் தயங்கமாட்டார்கள். கூசாமல் பொய் உரைப்பது; உத்தரவாதம் வழங்குவது என்பதில் இவர்கள் முன்பின் யோசிக்கமாட்டார்கள்.
அட! செய்வதாக இருந்ததால்தானே சிந்தித்துப் பதில் கூற வேண்டும். மாறாக வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்க வழக்கங்கள் இல்லாத போது உத்தரவாதத்தையும் வழங்குவதில் இவர்கள் ஒரு போதும் தடுமாற்றம் கொள்வதில்லை.
அந்தந்த இடத்தில் பொய் உரைத்து; பொய்மையான உறுதி மொழிகளை வழங்கி அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்து தப்பிக் கொண்டால் அது போதும் என்று நினைக்கின்றவர்கள்தான் இத்தகையவர்கள்.
இவர்களை இப்போது எங்கே? காணலாம் என்று யாராவது அறியும் ஆவலில் கேட்டால், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் காண முடியும் என்பதே பதிலாகும்.
அட! இலங்கையில் பார்க்கக்கூடியவர்களை ஜெனிவாவில் போய்ப் பாருங்கள் என்று சொல்வது உங்களுக்கு நியாயமாக இருக்கிறதா? என்று நீங்கள் கேட்பதும் புரியாமல் இல்லை.
இருந்தும் இலங்கையில் இருந்து பிரதிநிதித்துவ அடிப்படையில் சென்றவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்குகின்ற உறுதிமொழிகள் தான் ரோசம் கெட்டவை என்று சொல்லலாம்.
என்ன செய்வது? இவர்கள் அங்கு சென்று எதைக் கூறினாலும் அதை ஆமாம் போட்டு கேட்கும் அளவில் ஐ.நா அதிகாரிகள் இருக்கின்றனர். தமிழர்களுக்கு பாதிப்பு என்பதற்காக நாம் துள்ள முடியுமா?
மனித உரிமை; மனித உரிமை மீறல் என்றால் அதுவும் எங்களுக்குத் தேவையான இனமாக- கனமாக இருக்க வேண்டும் என்பது ஐ.நாவின் முடிவாக இருக்கும் வரை ரோசம் கெட்டவர்கள் ராசாவிலும் பெரியவர்களாகவே இருப்பார்.
இத்தகையவர்கள் செய்வோம் என்பார்கள். எதுவுமே நடக்கமாட்டாது என்பதுதான் உண்மை.