இனவாதம் நோக்கிய இலங்கையின் மாற்றப் போக்கு வரலாறு – மு.திருநாவுக்கரசு

இனவாதம் நோக்கிய இலங்கையின் மாற்றப் போக்கு  வரலாறு -   மு.திருநாவுக்கரசு

நவீனகால அரசியலில், அதாவது 1880களில் அநகாரிக தர்மபாலாவால் ஓரினத்தன்மை கொண்ட சிங்கள-பௌத்த இனவாத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. இத்தகைய பண்டைய வரலாற்று சிந்தனைக்கு உட்பட்டுச் செயற்படத்தக்கதாக வடிவமைக்கப்பட்ட அத்தகைய சிங்கள-பௌத்தவாதமானது சிங்களத் தலைவர்களில் ஒருசாரார் மத்தியில் தெளிவாக தலையெடுக்கத் தொடங்கியிருந்தது. இப்போக்கிற்கு குறிப்பாக பரன் ஜெயதிலக, டி.எஸ்.செனநாயக்க போன்றோர் 1930களில் வீரியத்துடன் தலைமைதாங்கத் தொடங்கினர்.
இத்தகைய பேரினவாதமானது நவீன அரசியல் அர்த்தத்தில் ஐ.தே.க இன் பாசறையிற்தான் தெளிவாக வேரூன்றத் தொடங்குகிறது. பரன் ஜெயதிலக, டி.எஸ்.செனநாயக்கா போன்றோர் இதற்குத் துடிப்பாக தலைமை தாங்கக்கூடியவர்களாக ஆனபோதிலும் அப்போது அங்கு தலைமைத்துவ போட்டி இருக்கவில்லை. தலைமைத்துவம் பொறுத்து பரன் ஜெயதிலகாவும் அவரை அடுத்து டி.எஸ்.செனநாயக்காவும் தலைவர்கள் என்ற ஓர் அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமையிருந்ததினால் அதிகாரத்தின் பொருட்டான ஆளுமைப் போட்டி எழவில்லை.
ஆனால் இதன் அடுத்த தலைமுறையினரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும், டட்லி செனநாயக்கவுக்கும் இடையில் ஆளுமைப் போட்டி உருவானது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன டி.எஸ்.செனநாயக்காவின் மகனான டட்லி செனநாயக்காவை விட ஐந்து வயதால் மூத்தவர். ஆனால் தந்தையாரின் அரவணைப்பின் கீழ் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவைவிட முதலில் டட்லி செனநாயக்க அரசாங்க சபை (State Council) உறுப்பினரானார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது இளமைப் பராயத்தில் ஒரு மார்க்சியவாதியாக காணப்பட்டார். இவர் இளைஞராக இருந்தபோது மார்க்சிசம் பற்றி ஒரு சிறுநூல் எழுதியதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஆரம்பத்தில் மார்க்சியவாதியாக காணப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன பின்பு தன்னை ஒரு தூய பௌத்த சிங்களவாதியாக அலங்கரிக்கத் தொடங்கினார். டட்லி செனநாயக்காவுடனான தனது ஆளுமைப் போட்டியில் இனவாதத்தை அவர் ஒரு கருவியாக தேர்ந்தெடுத்தார்.
1943ஆம் ஆண்டு அரசாங்க சபைக்கான களனி தொகுதி இடைத்தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன போட்டியிட்டு, வெற்றிபெற்று அரசாங்க சபை உறுப்பினரானார். அவர் தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கசபை சென்றதும் செய்த முதலாவது முக்கிய பணி சிங்களம் மட்டும் அரசகர்ம மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை 1943ஆம் ஆண்டு சூன் மாதம் அரசாங்க சபையில் முன்மொழிந்தமையாகும்.
இலங்கையின் வரலாற்றுக் கருப்பையில் சிங்கள-பௌத்த இனவாதத்திற்கு நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட ஜெயவர்த்தன, மார்க்சியத்தை கைவிட்டு தூய பௌத்த சிங்களவாதியாக செயற்படும் அரசியலில் ஈடுபட்டு சிங்கள இனவாத வரலாற்றுப் போக்கை பலப்படுத்துபவரானார். ஏற்கனவே பௌத்த-சிங்கள இனவாத்திற்கு பரன் ஜெயதிலகாவும், டி.எஸ்.செனநாயக்காவும் தெளிவான தலைமைத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டனராயினும் ஆளுமைப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான ஒரு முக்கிய ஆயுதமாக இனவாதத்தை கையிலெடுத்த முதலாவது நபராக ஜெயவர்த்தனாவே காட்சியளித்தார். இந்த ஆளுமைப் போட்டி நாடகத்தை நாம் பின்வருமாறு காட்சிப்படுத்திக் காணவேண்டும்.
ஜெயவர்த்தன முன்மொழிந்த தனிச்சிங்கள தீர்மானத்தின் மீதான வாதம் 1944ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நிகழ்ந்தபோது அதற்கு அன்றைய சூழலில் பலமான எதிர்ப்பு அரசாங்க சபையில் இருந்தது. இதனைக் கண்டு தயக்கத்துடன் தனது தீர்மானத்தில் இருந்து ஜே.ஆர். பின்வாங்கி சிங்களத்துடன் தமிழும் அரசகர்ம மொழியாக வேண்டும் என்ற திருத்தத்தை ஏற்றுக் கொள்பவரானார்.
 தேர்தல் வெற்றிக்கு பின்னர் உணவுண்ணும் பண்டாரநாயக்கா (அருகில் சுனேத்திரா சந்திரிகா அனுரா) - 11 - 04 - 1956
தேர்தல் வெற்றிக்கு பின்னர் உணவுண்ணும் பண்டாரநாயக்கா (அருகில் சுனேத்திரா சந்திரிகா அனுரா) – 11 – 04 – 1956
ஆனால் எந்த டட்லியுடனான ஆளுமைப் போட்டியின் நிமித்தம் ஜே.ஆர். இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தாரோ அந்த டட்லி மேலும் ஒருபடி முன்சென்று சிங்கள மொழி மட்டும் அரசகர்ம மொழியாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை வற்புறுத்தி அரசாங்க சபையில் அதிக தீவிரத்துடனும், அதிக வன்மத்துடனும், மிகப் பலமாக வாதிட்டார்.
சிங்களத்துடன் தமிழும் உத்தியோக மொழியாக வேண்டுமென்ற திருத்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிகழ்ந்தபோது ஜே.ஆர் உட்பட 29 பேர் அதற்கு சாதகமாகவும், 8 பேர் அதற்குப் பாதகமாகவும் வாக்களித்தனர். அவ்வாறு பாதகமாக வாக்களித்தோரில் பிரதானமானவர் டட்லி செனநாயக்க என்பது பெரிதும் கவனிக்கத்தக்கது.
சிங்கள-பௌத்த இனவாதத்திற்குப் பொருத்தமான பண்டைய வரலாற்றுப் பாதையை செப்பனிட்டு தமது ஆதிக்கப் போட்டியை முன்னேற்றலாம் என்பதை மேற்படி சிங்கள அதிகாரவர்க்கக் குழாத்தைச் சேர்ந்தோர் அடையாளங் கண்டுகொண்டனர். இவர்கள் அனைவருமே ஆங்கிலேயர் ஆட்சியின்போது தமது அதிகார நலன்களுக்காக ஆங்கிலிக்கன் கிறிஸ்துவத்தை தழுவியிருந்தோர் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். பரன் ஜெயதிலக, டொன் ஸ்டீபன் செனநாயக்க, டட்லி செனநாயக்க, யூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன என்ற இவர்களின் பெயர்களின் முன்னால் இருக்கும் பெயர்கள் அனைத்தும் கிறிஸ்தவ பெயர்களாகும் என்பது இங்கு கவனத்திற்குரியது.
இவர்கள் அனைவரும் 1880களின் பின்னான சிங்கள பௌத்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இனவாத அலையை உணர்ந்து கொண்டு குறிப்பாக சர்வஜன வாக்குரிமையின் கீழ் தமக்கான வாய்ப்புக்கள் இனவாத அடிப்படையில் பெருக இடமிருப்பதைக் கண்டு பௌத்த-சிங்கள இனவாத தலைவர்களாக காட்சியளிக்கத் தொடங்கியவர்களாவர்.
கூடவே SWRD. பண்டாரநாயக்கா என்ற பெயருக்கு முன்னால் இருக்கும் சாலமன் வெஸ்ட் ரிச்வே டயஸ் என்ற பெயர்களின் நீட்சியும் அவர் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவத்தை தழுவியிருந்தன் அடையாளமே ஆகும்.
ஆனாலும் அவரிடம் பல்லினத் தன்மை கொண்ட ஒரு நவீன வரலாறு பற்றிய பார்வையும் நம்பிக்கையும் ஓரளவு இருந்தது. கூடவே இது அனைத்து இடதுசாரித் தலைவர்களிடமும் ஆரம்பத்தில் இருந்தது.
பண்டாரநாயக்க ஒரு மார்க்சிய இடதுசாரியல்ல. ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு வலது-இடதுசாரியாவார். அதற்காக அவர் ஒரு Fabian Socialist -ம் அல்ல. அதேவேளை உயர்கல்வி பயின்ற மேற்கூறப்பட்ட அனைத்து இடதுசாரிகளும் ட்ராஸ்கியவாத-மார்க்சிய இடதுசாரிகளாக காணப்பட்டனர். இதில் பீட்டர் கெனமன்ட் போன்ற சிலர் பின்னாளில் ஸ்டாலினிச-மார்க்சிய இடதுசாரிகளாக இருந்தனர்.
பண்டாரநாயக்க வலது-இடதுசாரியாக இருந்தபோது என்.எம்.பெரேரா உட்பட்ட மேற்படி அனைவரும் மார்க்சிஸ இடதுசாரிகளாக இருந்தனர். ஆனால் மார்க்சிஸ இடதுசாரியான பிலிப் குணவர்த்தனா தன்னை இடது-வலதுசாரியாக முதலில் மதமாற்றம் செய்து கொண்டார். அக்காலத்தில் பண்டாரநாயக்க வலது-இடதுசாரியில் இருந்து வலது-வலதுசாரியாக மாறிக்கொண்டார். இதன்பின்பு மார்க்சிஸ இடதுசாரிகள் இடது-வலதுசாரிகளாக மாறி இறுதியில் வலது-வலதுசாரிகளாகவே செயற்படலாயினர்.
இங்கு பண்டாரநாயக்காவும் மற்றும் மார்க்சிஸ இடதுசாரிகளும் ஆரம்பத்தில் பல்லினம் சார்ந்த இன ஐக்கியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாய், பல்லின சமூகத்தை உண்மையாகவே விரும்பியவர்களாய்க் காணப்பட்டனர். ஆனால் செனநாயக்க குடும்பத்துடனான அதிகாரப் போட்டியின் நிமித்தம் பண்டாரநாயக்கா ஐ.தே.க.வில் இருந்து பிரிந்து சுதந்திர கட்சியை அமைத்ததைத் தொடர்ந்து அதுவும் குறிப்பாக 1950களின் மத்தியில் அவர் தீவிர இனவாதியாக மாற்றம் அடைந்தார். குடும்ப ஆதிக்கப் போட்டிக்கு இலங்கையின் வக்கிரமடைந்த இனவாதக் களம் சாதகமாக இருப்பதை பண்டாரநாயக்கா உணர்ந்தார். அந்த இனவாதத்தை மாற்ற வேண்டும் என்ற தனது ஆரம்பகால சிந்தனையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக அந்த இனவாதக் களத்தை மேம்படுத்தி தானே அதற்குப் பெரிதும் தலைமை தாங்குபவருமாக மாறினார்.
ஆரம்பத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாசறைதான் அரசியல் அர்த்தத்தில் இனவாதத்தின் தாய்நிலமாக காணப்பட்டது. ஐ.தே.க என்ற கட்சி தொடங்க முன்பிருந்தே இந்த பாசறையைச் சேர்ந்த டி.எஸ்.செனநாயக்க, டட்லி செனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்போர் தெளிவான இனவாதிகளாக காட்சியளித்தனர். பின்பு பிரேமதாஸ கூடவே லலித் அதுலத்முதலி, காமினி திஸநாயக்க, ரணில் விக்ரமசிங்க என்போர் மேற்படி ஐ.தே.க பாசறையில் எழுந்த அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான இனவாதத் தலைவர்களாயினர்.
மேற்படி ஐ.தே.க பாசறையில் இருந்து கிளைவிட்ட பண்டாரநாயக்காவிடம் பல்லினக் கலாச்சார சிந்தனை இருந்த போதிலும் அவர் பின்பு இந்த இனவாதப் பாசறையின் வாரிசாகவே தன்னையும் ஆக்கி, அதன் வழியில் சுதந்திரக் கட்சியையும் வழிநடத்தினார். இவ்வாறுதான் பண்டாரநாயக்க இலங்கையின் வரலாற்று சகதிக்குள் சிக்குண்டு அவர் தனக்குத்தானே இனவாத சேறுபூசும் படலத்தை ஆரம்பித்தது மட்டுமன்றி இலங்கையின் அரசியலை மீளமுடியாத இனவாத சகதிக்குள் தள்ளியும் விட்டார். இனவாத சகதியை மாற்றவேண்டிய பண்டாரநாயக்க அச்சகதிக்குள் தானே மாறிப் போனவருமானார்.
இப்பின்னணியில் இடதுசாரித் தலைவர்களும் இனவாத சகதிக்குள் சிக்குண்டு கொள்பவர்களாக மாறினர். எவ்வளவுதான் இவர்கள் அறிவுபூர்வமாக இனவாதத்திற்கு எதிராக சிந்தித்திருந்த போதிலும், அதற்கு எதிராக விரியத்துடன் எழுந்த வலதுசாரி இனவாதத்திற்கு முன்னால் வலது-இடதுசாரியான பண்டாரநாயக்காவும், மார்க்சிஸ இடதுசாரிகளும் சரணடைந்து, பின்பு தீவிர இனவாதிகளாக மாறினர்.
இத்தகைய இனவாதம் நோக்கிய இலங்கையின் மாற்றப் போக்கு வரலாறானது தொடர்ந்து அப்படியே மாறிக்கொண்டிருந்தது. குறிப்பாக 1970களின்  பிற்பகுதியிலும் 1980களின் முடிவுவரையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி அதற்கப்பால் மேலும் ஒருபடி மேலே சென்று அதற்கான தமிழீழ ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தும், எழுதியும், பேசியும் வந்த முன்னணி இடதுசாரி சிங்கள அறிஞர்களும் எஞ்சியிருந்த சில இடதுசாரித் தலைவர்களுங்கூட இனவாதத்தின் பக்கம் தம்மை மதமாற்றம் செய்துகொண்டு இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது Zero Casuality என்று ஐநா சபையிலும், சர்வதேச அரங்கிலும் மற்றும் உள்நாட்டு அரங்கிலும் பேசியும், எழுதியும், அறிக்கையிட்டும் கொண்டனர்.
சிங்கள இனத்தவரை உரிமையாளராகவும், ஆசிரியராகவும் கொண்டு கொழும்பில் இருந்து வெளியிடப்படும் லங்கா கார்டியன் என்ற இருவாராந்த ஆங்கிலச் சஞ்சிகையில் குறிப்பாக 1980களில் வெளிவந்த கட்டுரைகளில் மேற்படி தமிழீழம் அமைப்பதற்கான ஆயுதப் போராட்டத்தை அங்கீகரித்தும் புரட்சிக் கனல் கக்கும் கட்டுரைகளை எழுதியிருந்த சிங்கள இடதுசாரி அறிஞர்களும், தலைவர்களும்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது Zero Casuality என்ற அசிங்கமான வாதத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி இடதுசாரிகளின் நிலைப்பாடுகளை 1980களில் வெளிவந்த லங்கா கார்டியன் (Lanka Guardian) என்ற சஞ்சிகையில் அப்பட்டமாகக் காணலாம்.
இலங்கையின் இனவாத வரலாற்றுப் பின்னணியில் தமக்கான நலன்கள் புதைந்திருப்பதை உணர்ந்திருந்த வலதுசாரி மற்றும் இடதுசாரிச் சிங்களத் தலைவர்கள் அந்த இனவாதத்தை மேலும் பலப்படுத்தி மெருகூட்டுபவர்களாக மாறிச்சென்றனர். ராஜபக்ஷாவோடு கைகோர்த்திருந்த ஜே.வி.பியினர் மற்றும் மார்க்சிஸ இடதுசாரிகள் என்று தம்மைக் கூறும் தலைவர்களையும், இராஜதந்திரிகளையும், அறிஞர்களையும் இதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறலாம்.
இறுதியாக இதனை தொகுத்து நோக்குவோம்.
தொடரும்…
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila