எம் ஆசை மகனே! ஹக்கீம் நாம் கூற வேண்டியதை நீ கூறு!


போர்க்குற்றம் தொடர்பில் இராணுவத்திற்கு எதிரான விசாரணை அவசியமில்லை. போரில் நடந்த இழப்புக்களுக்கும் குற்றங்களுக்கும் தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடித்தால், நல்லிணக்கம் ஏற்பட மாட்டாது என்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர ஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மு. சிவசிதம்பரத்தின்  93ஆவது பிறந்த தின நிகழ்வு வட மராட்சியில் உள்ள கரவெட்டியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்ட தில் ஆச்சரியங்கள் இல்லை. ஏனெனில் மகிந்த ராஜ
பக்சவின் ஆட்சியின் போது, போர்க்குற்ற விசாரணையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு ஜெனிவாவுக்குச் சென்ற ரவூப் ஹக்கீம் அங்கு தமிழ் மக்களுக்கு எதிராக கடும் பிரசாரம் செய்தார்.

வன்னிப் போரில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போது, எதுவும் பேசாமல் பார்த்திருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இப்போது, அடம்பிடித்தால் நல்லிணக்கம் ஏற்படாது என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறுவதுதான் ஆச்சரியத்துக்குரியது. 

பேரினவாத ஆட்சி அதிகாரத்தின் கொடூரத்தனங்கள் அரங்கேறிய வன்னிப் பெருநிலப்பரப்பில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்த போது அதனைப் பார்த்திருந்த ரவூப் ஹக்கீம் தமிழ் மக்களுக்கு அறிவுரை கூற எந்த வகையிலும் தகுதியற்றவர்.

அதேநேரம் அமரர் மு.சிவசிதம்பரத்தின் பிறந்த தின நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வது என்பது எந்த வகையிலும் பொருத்துடையதன்று. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரத்தின் பிறந்த தின நிகழ்வில் நல்லதொரு அரசியல் உரை இடம்பெற வேண்டும் என நம் தமிழ் அரசியல் தலைமை நினைத்திருந்தால், 
தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என குரல் கொடுக்கக் கூடிய சிங்கள அரசியல்வாதிகளை அழைத்து அவர்கள் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். 

இதைவிடுத்து போர்க்குற்ற விசாரணையைத் தடுக்க பாடுபட்ட ஒருவரை-தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கக்கூடாது என சதா சிந்திக்கின்றவரை அழைத்து அவரை உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்தமை தமிழ் அரசியல் தலைமையின் ஒரு திட்டமிட்ட செயல் என்பது மறுக்க முடியாத உண்மை.

சரி! நல்ல நோக்கத்துடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அழைத்து பேச வைத்தோம் என்றால், அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்ன பேசினார். நடந்து முடிந்த சம்பவங்களுக்கு தீர்வு வேண்டும் என்று தமிழினம் அடம் பிடித்தால் நல்லிணக்கம் ஏற்படாது என்று பேசினார். 

இவ்வாறு கூறுவதற்கு இவர் யார்? போரில் தம் உறவுகளை இழந்தவர்களைப் பற்றி பேசாமல் விட்டு விடுங்கள் என்று கூறுகின்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடபுலத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற் றப்பட்ட நினைவை பெரும் எடுப்பில் ஏற்பாடு செய்தது ஏன்? அந்த நிகழ்வையும் மறந்து-மன்னித்து விட்டி ருக்கலாம் அன்றோ!  அதைச் செய்யாதவர் தமிழர்களின் இழப்புகளுக்கு தீர்வு தேடக்கூடாது என்று கூறு வது அவர் கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மார்க்கத் துக்கு ஏற்புடையதா? நியாயமானதா?

அட! எங்கள் தமிழ் அரசியல் தலைமைதான் நினைத்ததை, தான் கூறாமல் அமைச்சர் ரவூப் ஹக்கீமைக் கொண்டு கூறியுள்ளது. இதுதான் உண்மை.

இல்லையயன்றால் அமரர் மு.சிவசிதம்பரத்தின் பிறந்த தின நிகழ்வு நினைவில்; தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகி யோரின் முன்னிலையில், போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை என்று ரவூப் ஹக்கீம் எப்படிச் சொல்ல முடியும்.  ஆக, தம்பி ஹக்கீம் இனி ஒருக்கா பிரபாகரன் பிறந்த மண்ணுக்கு வந்து போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை, நீங்கள் அடம்பிடித்தால் எல்லாம் கெட்டுப் போய்விடும் என்று எங்கட தமிழ் மக்களுக்கு சொல்லிவை. 

நாங்கள் சொல்ல வேண்டியதை நீ சொன்னால் நல்லதுதானே. இதை நீ சொல்வதற்காக அமரர் சிவ சிதம்பரத்தின் பிறந்ததின நிகழ்வை ஏற்பாடு செய்கிறோம் என்று எங்கட தலைமை சொல்லாமல் அமை ச்சர் ஹக்கீம் ஒருபோதும் இப்படிப் பேசியிருக்க மாட்டார் என்பதை எந்தக் கோயிலிலும் சத்தியம் செய்ய நாம் தயார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila