விஹாரைகளை புனரமைப்பதற்கு அக்கறை காட்டும் அரசாங்கம் மக்கள் நலன் பற்றி சிந்திக்காதது ஏன்?

nainativu-island-jaffna-buddhist-stupa-thumb-2

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் சிதைவடைந்த விஹாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதில் அரசாங்கம் காட்டும் அக்கறையை, யுத்தத்தால் நலிவுற்றுப் போயுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் காட்டுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தப் பாதிப்பிற்குள்ளான வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த சித்தார்த்தன், மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படாமல், பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சித்தார்த்தன், இவை பற்றி அரசாங்கம் அறிந்திருந்தும் எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் அழிவடைந்ததாக அரசாங்கம் கூறும் விஹாரைகள் எவையும் வடக்கு கிழக்கில் இல்லையென குறிப்பிட்டுள்ள சித்தார்த்தன், தமிழர் பிரதேசங்களில் மேலும் பல விஹாரைகளை அமைக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான திட்டமிட்ட மதத் திணிப்பு நடவடிக்கைகள் கடந்த கால ஆட்சியாளர்களின் செயற்பாடுகளையே காட்டி நிற்பதாகவும், இவற்றிற்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் தெரிவிப்பது, தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே யுத்தப் பாதிப்பிற்கு உள்ளாகி, வாழ்வாதாரம் சிதைவடைந்து, பொருளாதாரம் அழிவடைந்து போயுள்ள தமிழ் மக்களின் மனநிலைகளை அரசாங்கம் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயற்பட வேண்டுமென சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila