புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வரும் நிலையில், இதுகுறித்த சந்தேகங்கள் வலுவடைந்து வருகின்றன.
அரசாங்கம் இதுகுறித்து உடற்கூற்று பரிசோதனை நடத்துவதற்கு தயாரென தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுமார் 800 போராளிகள் தயாராக உள்ளனரெனவும், அரசாங்கம் உடன் இப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனநாயக போராளிகள் அமைப்பின் முக்கியஸ்தரும் முன்னாள் போராளியுமான கணேசலிங்கம் சந்திரலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் மருத்துவர்கள் மீது, குறிப்பாக வடக்கு கிழக்கு மருத்துவர்கள் மீது தாம் நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், சர்வதேச மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யவேண்டுமென கோரி இந் நடவடிக்கையை குழப்பியடிக்க வேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, இவ்விடயத்தில் அரசியல் தலையீடுகளை விரும்பவில்லையென்றும் கணேசலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட சுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளில், நூற்றிற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் இதுவரை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் அதிகமானோர் புற்றுநோயினாலும், செல் துகள்கள் உடம்பிலிருந்து வெளியேற்றப்படாத நிலையிலும் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருந்த தாம், புனர்வாழ்வுக்கு பின்னர் இயங்க முடியாமல் இருப்பதாகவும், பாரம் தூக்க முடியாமல் இருப்பதாகவும் முன்னாள் போராளிகள் முறையிட்டுள்ளனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட காலத்தில், இராணுவத்தினரால் தமக்கு ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், அவை எதற்காக ஏற்றப்பட்டன என்ற காரணத்தை தம்மிடம் தெரிவிக்கவில்லையென்றும் அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற நல்லிணக்க செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வின்போது, முன்னாள் போராளியொருவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முன்னாள் போராளிகளுக்கு உடற்கூற்று பரிசோதனை நடத்த முடியுமென கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே, அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் உடன் பரிசோதனையை ஆரம்பிக்க வேண்டுமென புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் கோரி நிற்கின்றனர்.