பெரும்பான்மை மக்களின் கை ஓங்கியிருக்கும் இந்நிலையில், உள்நாட்டு நீதிமன்றங்கள் நீதியை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே சர்வதேச நீதிபதிகளே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.
அவர் மேலும் தெரிவிக்கையினில் உள்ளக விசாரணைகள் குமாரபுரம் வழக்குப் போல முடிவடையும் என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை.எனவே பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் உள்ளேற்பே நீதியைப் பெற்றுத்தரும் என்ற விடயத்தை நாங்கள் ஊன்றிக் கூற வேண்டிய ஒரு கடப்பாடு உருவாகியுள்ளது. இந்த விடயத்தை எமது தூதரகங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கூறிக் கொண்டே இருப்பது அவசியம்.
எமது பெரும்பான்மையின நீதிபதிகள் சிங்களவர்களுக்குப் பக்கச்சார்பாக இதுவரையில் நடந்து வந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு நூல் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயந்த அல்மெயிடா குணரத்ன, செல்வி கிஸாலி பின்டோ ஜயவர்த்தனா மற்றும் ஜெகான் குணதிலக ஆகிய மூன்று சிங்கள சட்டத்தரணிகளால் சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நாட்டின் உள்ளக விசாரணை நீதியைப் பெற்றுத் தரமாட்டாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே மேற்படி “நீதித்துறை மனக்கிடக்கை” என்ற நூல் அமைந்துள்ளது.
போர்க் குற்றங்கள் பற்றிய உண்மையை அறிந்தால்த்தான் நல்லெண்ணத்திற்கு வழி வகுக்கலாம்.
அது மட்டுமல்ல. வழக்கு நடத்துநராக எமது சட்டத்துறைத் தலைமையதிபதி ஏற்படக் கூடாது. சர்வதேச புகழ் பெற்றவர்களைக் கொண்ட குழு சில காலத்திற்கு முன் எமது சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்கள சட்டத் தரணிகள் பற்றி மிக மோசமாக விமர்சித்தார்கள். அவர்களும் இராணுவத்தினருக்குப் பக்கச் சார்பாய் நடந்து கொண்டதை எமக்கு உணர்த்திச் சென்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக் கூறலும் அரசியல் தீர்வு பற்றியதும் எனும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் பேரவை ஐந்தாவது கூட்டத் தொடர் 7.8.2016 ஞாயிற்றுக்கிழமை காலை யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று இணைத்தலைவருரையாற்றும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்