துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு முயல்வதாக குற்றச்சாட்டு

Jaf

துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அரசு முயல்கின்றது என நல்லிணக்கத்திற்கான கருத்தறியும் செயலமர்வில் பெண்மணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நல்லிணக்கத்திற்கான கருத்தறியும் செயலமர்வு இன்று (சனிக்கிழமை) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பெண்ணொருவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பெண்மணி, இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. திருகோணமலை குமரபுரம் படுகொலைச் சம்பவமானது அனுராதபுரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலையில் நடைபெற்றதை ஏன், அனுராதபுரம் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி இக்கொலை சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியங்கள் இருந்தும், படுகொலை செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள். இந்நிலையில், போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றமே எமக்குத் தேவையாக இருக்கின்றது.
மேலும், சாலவ ஆயுதகிடங்கினால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீடு கொடுக்க முடியுமாயின், கடந்த 26 வருடங்களாக தமது சொந்த நிலங்களை விட்டு முகாமில் இன்னலுறும் மக்களுக்கு ஏன் 5 ஆயிரம் ரூபாயேனும் வழங்க முடியவில்லை. அவ்வாறாயின் தற்போதைய ஜனாதிபதியும் தமிழர் சிங்களவர் என்ற பாகுபாட்டுடன் செயற்படுவதாகவே புலப்படுகிறது.
மேலும், நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் வட மாகாணத்திலிருந்து இராணுவத்தினரை அகற்ற முடியாது என பாதுகாப்பு அமைச்சர் கூறுகின்றார். அவ்வாறாயின், துப்பாக்கி முனையிலேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென அரசாங்கம் எண்ணுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila