கீரிமலை புனித தீர்த்தக் கடலை துப்புரவு செய்யாதது ஏன்?


கீரிமலை புனித தீர்த்தக் கடல் கற்பாறைகள் நிறைந்த இடமாக இருப்பதனால் அங்கு பிதிர்க் கடன் செய்யச் செல்பவர்கள் மிகப்பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

கடந்த ஆடி அமாவாசை விரத தினத்தன்று குறைந்தது ஓர் இலட்சம் பேர் வரை கீரிமலை புனித தீர்த்தக் கடலில் நீராடியிருப்பர். 

இவ்வாறு நீராடியவர்கள் கல்லில் தடக்கி கடலில் வீழ்ந்து எழுந்து காயப்பட்டனர். இந்தக் கொடுமை நீண்டு செல்கின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அரச அதிபர், உள்ளூராட்சி சபையின் உயர் அதிகாரிகள் பெற்மிற் வாகனத்தில் வருமானம் உழைக்கும் மக்கள் பிரதிநிதிகள் என எவரும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராவது இது விடயத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். அவர் ஒரு கத்தோலிக்க மதத்தவராக இருப்பதால் அவருக்கு கீரிமலையில் இந்துக்கள் தீர்த்தமாடுவது தெரியாமல் இருக்கக் கூடும்.

ஏன்? வடக்கு மாகாண சபையில் ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்று வாக்கெடுப்பு நடத்துகின்ற மகா மேதைகளாவது கீரிமலைத் தீர்த்தக் கடலின் அவலத்தை கண்டிருக்கலாமன்றோ.   

தவிர இந்துமாமன்றம்; இந்துப் பேரவை; சைவமகாசபை; சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியம் இவைகள் கூட கீரிமலைத் தீர்த்தக் கடலில் கிடக்கும் கற்பாறைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்காதது ஏன்? 

அட! கீரிமலை தீர்த்தக் கடலில் கிடக்கின்ற கல்லை அகற்றினால் அதற்கென்ன திறப்பு விழா செய்யலாமா அல்லது மாலை மரியாதை, மேள தாளங்கள் சகிதம் ஊர்வலம்தான் வைக்கலாமா? இவற்றைச் செய்ய முடியாததால்தான் கீரிமலைத் தீர்த்தக் கடலில் விளைந்து கிடக்கும் கற்பாறைகள் இன்றுவரை அகற்றப்படாமல் பரந்து கிடக்கிறது. 

இதற்கு மேலாக இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அதாவது கீரிமலைத் தீர்த்தக் கடலில் இந்துக்கள் தானே நீராடுகின்றனர். எனவே அவர்கள் கல்லில் விழுந்து கடலில் தாண்டாலும் அது பற்றிப் பரவாயில்லை என்பது எங்கள் உயர் அதிகாரிகளின் பொதுவான நிலைப்பாடு. 

அப்படியயாரு அபத்தம் நடந்தால் அதையும் அரசியலாக்கி சிங்கள ஆட்சிக்குக் குறை சொல்லி அடுத்தமுறையிலும் வாக்குப்பெறலாம் என்பது எங்கள் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்பார்ப்பு. 

இத்தகைய நிலையில் இந்த ஜென்மத்தில் கீரிமலைத் தீர்த்தக் கடலில் கிடக்கும் கற்கள் அகற்றப்பட மாட்டாது. யாராவது புண்ணியத்தில் அகற்ற முற்பட்டாலும் அதற்கு உரிமை கோருவதற்கும் பலர் தயாராக இருக்கின்றனர். 

எதுவாயினும் கவுணாவத்தை வேள்வியை நிறுத்துவதற்கு வழக்குத் தாக்கல் செய்த அந்தப் பெருமகன் கீரிமலைத் தீர்த்தக் கடலில் கிடக்கும் கற்பாறைகளால் மக்கள் படும் அவலத்தைத் தடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பொது வழக்குத் தாக்கல் செய்யாதது விசித்திரமாகவே உள்ளது. 

அட! கவுணாவத்தை கிராமிய மக்களுடன் தொடர்புபட்டது; இது உயர் அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்டது.

அவர்களை எதிர்க்கலாம், இவர் களை எதிர்த்தால் கடைசிக்காலத்தில் தரப்படும் கலாபூசணமும் இல்லாமல் போகுமன்றோ என்ற ஏக்கம்தான் பொதுவழக்குத் தாக்கல் செய்யத் தடை செய்கிறதோ தெரியவில்லை.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila