
காணாமல்போனோர் விவகாரம் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனைகளுக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதனை செய்யத் தவறின், தமிழ் மக்களது பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்துவோரை தட்டிக்கேட்க இனி தயங்க மாட்டோம் என்றும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று புதன்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்து, கிளிநொச்சி மாவட்ட மாதர் சங்க உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடாத்தினார்.
இதன்போது போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உட்பட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் காணாமல்போனோர் விவகாரம், சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த, கிளிநொச்சி மாவட்ட மாதர் சங்க உறுப்பினரும், காணாமற்போனோர் தொடர்பிலான மாவட்ட மட்ட நல்லிணக்க செயலணி உறுப்பினருமான யோகராஜா கலைவாணி, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதற்குப் பின்னரும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களது உறவினர்களைப் பயன்படுத்தி அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் வியாபாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தேச காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், காலத்தை இழுத்தடித்து நீதியை மறுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் திட்டமிட்டு இவ்வாறான செயல்களை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண சபையும் தமது பிரச்சனைகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை செய்ய அவர்கள் தவறினால் தமது தேவைகளை தாமே போராடி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்