நக்கீரர்(கள்) இல்லாத நாட்டில் மருத்துவ பரிசோதனைக்கும் அதே கதிதான்!



தருமி என்ற ஏழைப் புலவனுக்கு பொற்கிழி கிடைக்க வைப்பதற்காக சிவப்பரம்பொருள் புரிந்த திருவிளையாட்டுயாம் அனைவரும் அறிந்ததே.

இந்த அறிகைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேனும் நகைச்சுவை நடிகர் நகேஷிம் தான் காரணம். அவர்கள் நடித்த திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் இந்தக் காட்சி மிக அற்புதமாக காண்பிக்கப்படுகிறது.

தருமி என்ற ஏழைப் புலவனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்வது மட்டுமல்ல; குற்றம் இடம்பெற்று விட்டால் அந்தக் குற்றத்தை சாட்சாத் ஈஸ்வரன் இழைத்திருந்தாலும் அது குற்றமே என்பதை சபையில் சொல்லும் துணிவு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்துவதும் சிவப் பரம்பொருளின் நோக்கம்.

இப்போது மன்னர் சபையில் தருமியில் பாட்டில் குற்றம் காணப்படுகிறது. குற்றம் கண்டவர் சங்கத் தமிழ்ப் புலவர் நக்கீரர்.

தருமியின் பாட்டில் பிழை கண்டது யார்? என்பதை அறிய சிவன் மாறுவேடத்தில் மன்னர் சபைக்கு வருகிறார். பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்கிறார் நக்கீரர். இருவருக்கும் இடையில் வாதம் வலுக்கிறது.

அச்சமயம் வந்திருப்பது தாமே என சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து காட்டுகிறார்.  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவனுடன் வாதம் செய்கிறார் அந்த நக்கீரப் புலவன்.

மன்னர் சபை அதிருகிறது. வந்திருப்பது இறையனார் என்று தெரிந்தும் நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட நக்கீரனின் வீரத்தை மெச்சுகிறார் சிவன்.

ஆக, குற்றம் என்றால் அது யார் செய்தாலும் குற்றம்தான். இறைவனும் அதற்கு விலக்கல்ல என்பதுதான் இந்தக் கதையின் தத்துவம்.

என்னும் எங்கள் இலங்கை மண்ணில் மட்டும் எத்தனை கொலைகள் நடந்தாலும் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வது சுலபமாகி விடுகிறது. என்ன செய்வது? எங்கள் நாட்டில் நக்கீரர்களுக்கு பெரும் பஞ்சம்.

அதுவும் இனம் சார்ந்து அந்தப்பஞ்சம் இருப்பது தான் பெரு அபத்தம். இதன் காரணமாக கொலைக் குற்றவாளிகள் ஏதோ ஒருவகையில் தப்பித்துக் கொள்ள முடிகிறது.

இது ஒருபுறமிருக்க, முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது என்ற பேரில் உடலுக்கு கெடுதி ஏற்படுத்தக்கூடிய ஊசி மருந்து அவர்களுக்கு ஏற்றப்பட்டதான குற்றச்சாட்டுக்களும் முறைப்பாடுகளும் எழுந்துள்ள நேரத்தில்,

அது தொடர்பில் மருத்துவப் பரிசோதனை நடத்த அரசு தயார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதி உணர்ந்த ஒருவர். எப்போதும் அவரிடம் நியாயமான கருத்துக்களை எதிர்பார்க்க முடியும்.அந்த வகையில் தமிழ் மக்கள் அவருக்கு நன்றி கூறிக்கொள்வர்.

அதேநேரம் போராளிகளுக்கு ஊசி ஏற்றிய விடயம் தொடர்பில் மருத்துவ பரிசோதனை நடத்த அரசு தயார் என்பதற்கும் தமிழ் மக்கள் தமது ஆதரவைத் தெரிவிப்பர்.

ஆனால் பரிசோதனை செய்வது யார்? அறிக்கை எங்கு தயாரிக்கப்படும்? என்ற விடயங்களில் நக்கீரர்கள் இருப்பார்களா என்பதுதான் இப்போது எழுகின்ற ஐயம்.

கொலை செய்தவர்கள் சர்வசாதாரணமாக வெளியில் வரும்போது, இந்த மருத்துவ அறிக்கையில் மட்டும் அங்கிருப்பவர்கள் உண்மையை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புவது சாத்தியமற்றது என்பதால் இதிலும் சர்வதேச மருத்துவ நிபுணர் குழுவினர் பரிசோதிப்பதுதான் நல்லது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila