வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரனை விரட்ட வேண்டும் என்பதற்காக எனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு பிரேரணையை சபையில் சில உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்’ என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று நடைபெற்ற போது, அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பில் முதலமைச்சரால் குழுவொன்று அமைக்கப்படும் விடயம் விவாதிக்கப்படும் போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் வீட்டுக்குச் சென்ற சில உறுப்பினர்கள். முதலமைச்சருக்கு பாடம் புகட்டவேண்டும். முதலில் அவருடன் ஒட்டிக்கொண்டு திரியும் ஐங்கரநேசனை துரத்த வேண்டும் எனக்கூறியுள்ளனர். அதற்கு விந்தன் மறுப்புத் தெரிவித்ததுடன், அந்த விடயத்தை எனக்கும் கூறினார்.
அதே சிலர், பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன் வீட்டுக்கும் சென்று முதலமைச்சரை விரட்டி வேண்டும் என்றுள்ளனர். அதற்கு அவர் உடன்படவில்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கும் போது, கும்பலாகச் சேர்ந்து விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரியவர்கள், இன்று அமைச்சர்கள் என்னும் போது வேண்டாம் என்கின்றனர்.
எனக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படும் போது, சீதை தீக்குளிக்கத்தான் வேணும், இராமன் பார்க்கத்தான் வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார். சீதையை தீக்குளிக்கச் சொல்ல இராமனுக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், அது வாலிக்கு இல்லை. அமைச்சனாக எனக்கு எதிராக விசாரணை நடத்தப்படலாம் ஆனால், அமைச்சர்கள் என்னும் போது, சிறப்புரிமை பற்றி பேசப்படுகின்றது. எனக்கு எதிராக விசாரணை நடத்தப்படவேண்டும் என உறுப்பினர் அ.பரஞ்சோதி பல தடவைகள் சபையில் கோரி வந்தார். ஆனால் இப்போது, அமைச்சர்கள் என்னும் போது வேண்டாம் என்கின்றார்’ என்றார்.