தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே பேரவையின் இணைத்தலைவரான முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அண்மையில் அரசாங்கச் செயலணி ஒன்றில் பதவி வகிக்கும் நண்பர் ஒருவர் கொழும்பில் இருந்து என்னைக் காண வந்தார். அப்போது ஒரு முக்கிய விடயத்தைத் தெரிந்து கொண்டேன். எப்படியாவது வரும் செப்ரெம்பருக்கு முன்னர் தமக்கு வேண்டிய மக்கள் சிலரின் மனம் அறிந்து அவற்றின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான விபரங்களைச் சேகரிக்க வேண்டும். அதன்பின் அவற்றின் அடிப்படையில் புதியதொரு யாப்பின் வரைவை அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மார்ச் மாதம் வந்ததும் ஜெனீவாவில் எமது அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட இருப்பதாக அறிவித்தால் சர்வதேசம் அதன் பின்னர் இலங்கை பற்றி அலட்டிக் கொள்ளாது. பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை தப்பி விடலாம் என்பதே அவர் தந்த தகவல்.
அதாவது அரசியல் தீர்வு வந்து விட்டதே, இனி பொறுப்புக்கூறலில் வேகம் தேவையில்லை என்று கூறலாம் என்ற விதத்திலேயே அவரின் கருத்து அமைந்திருந்தது. எம்முட் சிலரும் இவ்வாறே சிந்திக்கின்றனர். அதாவது வருங்காலம் பற்றிச் சிந்திப்போம். சென்ற காலத்தை மறந்து விடுவோம் என்பது போல இந்தச் சிந்தனை அமைந்திருக்கின்றது. அவர்கள் மனதில் எழும் சில உள்ளார்ந்த வெறுப்புக்களும் இதற்குக் காரணமாய் அமைந்துள்ளது.
சரியோ பிழையோ இயக்க இளைஞர்களின் தியாகமே எங்கள் குறைகளை உலகறிய வைத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. வெறும் சிறுபான்மையினர் கிளர்ச்சியாகக் காணப்பட்ட எமது போராட்டம் வடகிழக்கின் பாரம்பரிய பெரும்பான்மையினரின் போராட்டமாகப் பரிணாமம் பெற்றதென்றால் அதற்கு அவர்களே காரணகர்த்தாக்கள் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும்.’வருங்காலம் பற்றிச் சிந்திப்போம், சென்றகாலம் போய் விட்டது’ என்ற சித்தாந்தம் பற்றிய ஒருமுக்கிய குறையை நாங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது இந்த அரசாங்கமோ எந்தப் பெரும்பான்மையின அரசாங்கமோ தரப்போகும் அரசியல் தீர்வு எமக்கு முழுமையான திருப்தியை அளிக்கப் போவதில்லை. அவற்றை ஏற்பதென்றால் போனால் போகட்டும் என்ற வகையில் தான் நாம் அவற்றை ஏற்கக்கூடும். ஏனென்றால் தற்போது இருப்பதிலும் பார்க்க சில முன்னேற்றங்களையே அரசாங்கம் ஆங்காங்கே முன் வைக்கும். உடனே எம்மவர்கள் ‘பார்த்தீர்களா? முன்பிலும் பார்க்க இது முன்னேற்றந் தானே’ என்பார்கள். அது சரியாக இருக்கலாம்.
ஆனால், எமது எதிர் பார்ப்புக்கள் அரசியல் ரீதியாக மேற்படி அரசியல் யாப்புக்களால் முற்றிலுந் திருப்திப்படுத்தப்படப் போவதில்லை. எனவே பொறுப்புக் கூறலை நாம் தியாகஞ் செய்து விட்டு பெறுமதியான நிலையான தீர்வொன்றையும் அரசியல் ரீதியாகப் பெற முடியாத நிலைமையே உருவாகும். அங்கும் தோல்வி இங்குந் தோல்வியாகவே முடியும்.- என்றார்.