நல்லூர்க் கந்தனுக்கு எழுதுகின்ற அன்பு மடல் இது. கந்தா! உனக்கு இன்று கொடியேற்றம். இனிவரும் இருபத்தாறு நாட்கள், உன் அலங்காரத்தில் மனதை பறிகொடுத்து பித்தராய் அலைகின்றவர்கள் ஏராளம். அதில் நானும் ஒருவன்.
உன் திருக்கோலத்தில் நாடு எதற்கு? ஊர் எதற்கு? இந்த உலகமே எதற்கு? உன் திருமுகம் காணும் பேறு ஒன்று போதாதோ என்று உள்ளம் எண்ணிக் கசிந்துருகும்.
அந்தளவிற்கு உன் அலங்காரம் அடியார் மனதை ஈர்க்கும் காந்தம்.
அதனால்தானோ, பஞ்சம் பசி வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி - கிளியே ஆறுமுகம் தஞ்சமடி என்று தவத்திரு யோகர் சுவாமிகள் பாடியருளினார்.
பஞ்சம், பசி, வெந்தணல் எல்லாம் எங்களைப் பதம்பார்த்த போதிலும் நல்லூர் முருகா! என்ற உன் நாமம் எங்களைக் காப்பாற்றும் படைக்கலமாயிற்று என்பது மறுக்க முடியாத உண்மை.
இருந்தும் முருகா! தமிழ் மக்கள் இன்னமும் தீராக்கவலை கொண்டு வாழ்வதன் காரணம்தான் என்ன?
இந்த உலகமே தமிழனின் அவலத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வல்வினைகள் தடுத் துக்கொள்கின்றன.
நாம் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இழப்புகள் சொல்லுந்தரமன்று. இருந்தும் இழந்தவனே விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற அளவில் நம்மவர்களும் இருக்கின்றனர் என்றால் இதன் மாயம்தான் என்ன?
உன்னுடன் போர் புரிந்த சூரனுக்குத்தானே உன் திருப்பெருவடிவத்தை காட்டினாய். ஒரு வீரனுக்கு நீ கொடுத்த மதிப்பு அதுவல்லவா?
அப்படியானால் இந்த மண்ணில் உரிமையோடு வாழ வேண்டும் என்று வீரத்தோடு மார்தட்டிய தமிழனுக்கு மட்டும் எதுவும் இல்லாமல் செய்வது ஏன்?
எங்கள் மீது உனக்கு வெறுப்பா? அல்லது சூரன் மீது போர் தொடுத்தது உனக்குச் சலிப்பா? எது வென்று நாம் அறியோம்.
ஆனால் ஒன்றை மட்டும் இத் திருமுகத்தில் உனக்கு எழுதிக்கொள்கிறேன். தமிழினத்தின் தலைவன் முருகன் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். தமிழர்கள் தோற்றால் அது நீ தோற்றதாகவே பொருள்படும்.
இராமனுக்கும் உனக்கும் வேறுபாடு உண்டு. இராமன் பகைவனைக் கொன்றவன். முருகன் பகைவனுக்கு சேவலாய், மயிலாய் வாழ்வு கொடுத்தவன்.
ஆகையால் நீ போர் புரிந்தவரையும் வாழவைப் பாய் என்பது நமக்குத் தெரியும். இது தமிழனுக்குப் பெருமை.
ஆரியர்கள் பகைவர்களை அழிப்பவர்கள். தமிழர்கள் பகைவர்களை அடக்குபவர்கள். இந்த உண்மையின் மத்தியிலும் இலங்காபுரியில் அநீதி கள் தொடர்ந்தும் அரங்கேறி தமிழர்களுக்கு பேர வலத்தை விளைவிக்கின்றன.
திருகோணமலையில் உள்ள குமாரபுரத்தில் இருபத்தாறு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உன் தீர்ப்பு என்ன?
அன்றறுக்க மறுத்த அரசர்களோடு நீயும் இணைந்து கொண்டாயா? அல்லது நீயும் தீர்ப்பு வழங்குவாய் என்பதை உணர்த்த மறந்தாயா?
முருகா! நல்லூர்க் கந்தா! இன்று உனக்கு கொடியேற்றம். உன் கொடியேற்றம் தமிழர்களுக்கு விடிவைத் தரட்டும். குமாரபுரத்தில் நடந்த கொடுமைக்கு நீ தீர்ப்பு எழுது. உன் தீர்ப்பு தீர்ப்புக்குத் தீர்ப்பாகட்டும். இதுவே எம் விண்ணப்பம்.