இந்துசமயம் சாராத தந்தைக்கு இன்று பிதிர்க்கடனாயின்...


இன்று ஆடி அமாவாசை. இந்துக்களின் புனிதமான விரத நாட்களில் ஆடி அமாவாசை முக்கியமானது. 
இறந்துபோன தம் தந்தையருக்கு பிதிர்க்கடன் செய்யும் விரதநாள் இது.

இறந்துபோன தம் தந்தையாரையும் அவர் தம் தந்தை, தந்தையின் தந்தை என்ற ஆண்வழிச் சந்ததியையும் நினைவு கூர்ந்து அவர்களின் ஆசியும் வாழ்த்தும் என்றும் தமக்கு துணை நிற்க வேண்டும் என பிரார்த்திக்கின்ற நாளே ஆடி அமாவாசை விரதநாளாகும். 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற தமிழ் வாக்கின் உண்மையை சான்றாதாரப்படுத்து வதாகவும் இந்நாள் அமைந்திருப்பதை காணமுடிகிறது.

தேகவியோகம் அடைந்த தம் தந்தையின் நினைவை ஒவ்வொரு அமாவாசையிலும்; தாயின் நினைவை ஒவ்வொரு பூரணையிலும் விரதம் இருந்து அனுஷ்டிக்க வேண்டும் என்று இந்து மத விதி கூறி நிற்கின்ற போதிலும்,

காலசூழ்நிலைகளில் ஒவ்வொரு அமாவாசையிலும் பூரணையிலும் விரதம் இருந்து புனித தீர்த்தக் கரையில் தர்ப்பணம் செய்து நீராடுவது சாத்தியப்பட வாய்ப்பில்லை.

இதன் காரணமாக தந்தைக்கு ஆடி அமாவாசையிலும் தாய்க்கு சித்திரைப் பெளர்ணமியிலும் விரதம் இருந்தும் அவர்களை நினைவுகூர்ந்து, தான தர்மங்கள் செய்து, புனித நதிகளில் நீராடி, பெற்றோரை வழிபடுகின்ற இந்த உயர்வான விரதம் ஏனைய மதத்தவர்களும் பின்பற்றக் கூடியது.

இருந்தும் இறந்துபோன தந்தையை நினைந்து விரதம் அனுஷ்டிக்குமாறு வலியுறுத்தப்படும் அமாவாசை நாளை விடுமுறை நாளாக ஆக்குவதில் இன்றுவரை எவரும் கரிசனை கொண்டது கிடையாது.

இதற்கு இந்த விரதம் இந்து சமயத்தவர்களால் கடைப்பிடிக்கப்படுவதும் காரணமாக இருக்கலாம். கெளதம புத்தபிரான் முத்தி அடைந்தது பூரணை என்பதால் ஒவ்வொரு பூரணைக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. 

பெளத்த மதம் சார்ந்து வழங்கப்பட்ட பூரணை விடுமுறையால் தாயை நினைந்து விரதம் இருக்கும் சித்திரைப் பெளர்ணமிநாள் விடுமுறை நாளாயிற்று. 

ஆனால் தந்தையை நினைவுகூரும் ஆடி அமாவாசை நாளுக்கு விடுமுறை கிடையாது. இதனால் அந்த விரதத்தை அனுஷ்டிப்பதில் பலரும் இடைஞ்சல்படுவது கண்கூடு. 

இன்று க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுகிறது. இன்றையநாள் ஆடி அமாவாசை விரதநாளாக இருந்தபோதிலும் அது பற்றி இலங்கைப் பரீட்சைத் திணைக்களமோ அன்றி அதனுடன் தொடர்புபட்டவர்களோ சிந்திக்கவில்லை. 

இதனால் தந்தையை இழந்து விரதம் அனுஷ்டிக்க வேண்டிய மாணவர்கள் அதிலும் குறிப்பாக வன்னிப் போரில் தந்தையை இழந்து போனவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவே முடியா தென்றாகிறது.
இதேபோல் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் இதுதான் நிலைமை. 

என்ன செய்வது? ஆடி அமாவாசை விரதம் என்பது இறந்துபோன, பெளத்த மதம் சார்ந்த; கத்தோலிக்க மதம் சார்ந்த; இஸ்லாமியம் சார்ந்த தந்தைக்கான விரதமாக இருந்தால் இன்றைய நாள் நிச்சயம் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கும். 

என்ன செய்வது? இது இந்து சமயம் சார்ந்ததாயிற்றே. ஆகையால் இன்றைய நாள் எதுவும் செய்யலாம் என்றாயிற்று. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila