மஹிந்தவும், கோட்டாவுமே யுத்தக்குற்றவாளிகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரே யுத்தக்குற்றவாளிகள்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படைகள் குறிவைத்து ஏவிய கொத்துக்குண்டுகளினாலும், ஏனைய வெடிகுண்டுகளினாலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டமைக்கு இவர்கள் இருவருமே காரணம்.
எனவே, சர்வதேச விசாரணைகள் ஊடாக இவர்களுக்குத் தண்டனை வழங்கினால் மட்டுமே நாட்டில் இனவாதம் ஒழிக்கப்பட்டு, உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லிணக்கச் செயலணி முன்னிலையில் இன்று கருத்து தெரிவித்த வடக்கு வாழ் தமிழ் மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும்.
இதுவரையில் அவ்வாறான ஒரு விசாரணை நடக்கவில்லை. காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணை பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படவேண்டும்.
அத்துடன், இதில் சர்வதேச பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட வேண்டும். அதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் வடபகுதியில் அமைக்கப்பட வேண்டும்.
யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் சர்வதேச விசாரணை மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு தண்டனை வழங்கப்படுவதன் ஊடாகவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் அதேவேளை, எமக்கும் பாதுகாப்பு இருக்கும்.
உள்ளக விசாரணைப் பொறிமுறைகளில் நாம் நம்பிக்கை வைக்க முடியாது. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணைக் குழுவே அமைக்கப்படவேண்டும்.
அப்போதுதான் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்படும். நாங்கள் சலுகைகளையோ, வேறு எதனையோ எதிர்பார்க்கவில்லை.
எங்களுக்கு நீதி வேண்டும். அதற்காகவே எல்லா இடங்களுக்கும் அலைகின்றோம். நாங்கள் கடுமையான உளப்பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளோம்.
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவற்றைச் செயற்படுத்தவேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila