சின்னப் பிள்ளைகளுக்கு கதை கேட்பதென்றால் அலாதிப்பிரியம். கதை கேட்டு வளர்ந்த பிள்ளைகளிடம் அபரிதமான ஆற்றல்கள் உருவாகுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு பேரன் தன் தாத்தாவிடம் கதை கேட்பது வழக்கம். சதா கதை சொல்லுமாறு தாத்தாவை தொந்தரவு செய்வான்.
பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த தாத்தாவை கதை சொல்லுமாறு பேரன் அடம்பிடிக்க, பத்திரிகைச் செய்திகளால் ஆத்திரமுற்றிருந்த தாத்தா பேரனுக்கு ஒரு வித்தியாசமான கதையைச் சொன்னார்.
தாத்தா: அது ஒரு பெரிய கட்டடத் தொகுதி. அங்கே சுமார் முப்பது நாற்பது பேர் குந்தியிருக்கின்றனர். ஒரு வர் மேடையில் அமர்ந்திருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் சிலபேர் அடிக்கடி எழுந்து ஏதோ சொல்லிவிட்டு அமர்கின்றார்கள். இடையிடையே குழப்பங்கள் நடந்தேறும்.
வசிட்டமா முனிவர் போல ஒருவர் அமர்ந்துள்ளார். நீதியை எடுத்துரைப்பதற்காக அவர் படாப்பாடு படுகிறார். எனினும் அவரைப் புரிந்துகொள்ளவோ அவரின் நேர்மைத்தனத்தை மதிப்பதற்கோ அங்கு ஒரு சிலரைத் தவிர வேறு எவருமில்லை.
மேடையில் இருப்பவரும் அடிக்கடி வசிட்டமா முனிவரைப் பார்த்து ஏதோ கடுமையாகச் சொல்கிறார். யாராக இருப்பார்? சிலவேளை விசுவாமித்திரராக இருப்பாரோ? எதுவும் புரியவில்லை.
ஆனால் அந்தக் கட்டடத்தில் ஒருநாளும் அவர்கள் ஒற்றுமையாக இருந்து ஒற்றுமையாகக் கதைத்துப் பேசி தீர்வு கண்டதே கிடையாது.
இன்னொருவர் இடையிடையே எழுந்து முக்கியமான விடயங்களைக் கூறுகிறார். அவரின் உரையில் புள்ளிவிபரங்கள், ஆதாரங்கள் இருப்பதைக் காண முடிகிறது.
இவரும் தாடியுடன் தான் காட்சியளிப்பதால் இவர் துர்வாச முனிவராக இருப்பாரோ என்ற ஐயம் எழுகிறது.
அதோ! அங்கு தொடங்கிவிட்டது குழப்பம்.
சிலகுரல்கள் : குற்றச்சாட்டு மீதான விசாரணை - வெளியார் விசாரிப்பதை ஏற்க முடியாது.
ஒருகுரல் : நீங்கள் தானே விசாரணை வேண்டும் என்கிறீர்கள்.
சிலகுரல்கள் : அது அப்போது. இப்போது நீங்கள் விசாரிக்க உடன்பட்டதால் விசாரணை வேண்டாம்.
ஒருகுரல் : அப்படியானால் முன்னர் நீங்கள் கேட்டது.
சிலகுரல்கள் : எல்லாம் குழப்புவதற்குத்தான்.
ஒருகுரல் : இப்படியே குழப்பினால்...
மேடைக்குரல் : என்னை அரசியலிலிருந்து ஒதுக்கப் பார்க்கிறீர்கள்....
ஒருகுரல் : நான் அப்படிச் செய்யவில்லை.
மேடைக்குரல் : என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது.
சம்மனசுகள் : என்ன அங்கே நடக்கிறது? அந்தக் கட்டடத்தில் கூட்டம் ஆரம்பமான நாளிலிருந்து ஒரே சண்டை; ஒரே குழப்பம் நடக்கிறது.யார் இவர்கள்? இவர்களை இங்கே அனுப்பி வைத்தது யார்? இந்தக் கட்டடத்தின் வாஸ்து பிழை போல...
தேவர்கள் : ஓ! பொதுமக்களே! தமிழ் மக்களே! அங்கே பாருங்கள் முதியோர் இல்லம். எவ்வளவு அமைதியாக அவர்கள் இருக்கின்றனர்.இவர்களும் அந்த முதியோர் இல்லத்துக்குப் பக்கத்தில்தானே இருக்கின்றனர். இவர்களால் ஏன்? அமைதியை கடைப்பிடிக்க முடியவில்லை.
பொதுக்குரல் : அதுதானே நாங்கள் இவர்களை நம்பினோம். அவர்கள் எங்கிருந்தோ வரும் கட்டளைகளை நிறைவேற்றுவதிலேயே காலம் கடத்துகின்றனர். நாங்கள் படும் துயர் தொடர்பில் அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது.அவர்களின் நோக்கம் எல்லாம் அந்தக் கூட்டத்தை குழப்புவதுதான்.
அதோ வசிட்டமா முனிவர் போல் இருப்பவரில் ஞானம் தெரிகிறது, உண்மை தெரிகிறது, நேர்மை தெரிகிறது அவரை நம்புவோம்... நம்புவோம்...
தாத்தா இப்படிக் கதை சொன்னதும் பேரன் கேட்டான். தாத்தா இந்தக் கதைக்கு என்ன பெயர்? வ.மா. ச.அ என்றார் தாத்தா. பெயரைக் கேட்ட பேரன் அதிர்ந்து போனான்.