இலங்கையின் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணா விரதப் போராட்டத்தை மீண்டும் ஒருமுறை நடத்தியிருக்கின்றார்கள். நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று ஓராண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூன்றாவது தடவையாக தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை அடையாள உண்ணா விரதத்தை நடத்தியிருந்தார்கள்.
கொழும்பு மகசின் சிறையில் 50 பேரும், அனுராதபுரம் சிறையில் 24 பேரும், மட்டக்களப்பு சிறையில் 2 பேரும், யாழ்ப்பாணம் சிறையில் 3 பேருமாக மொத்தம் 78 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களில் விசாரணைகள் முடிவடைந்து நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தவர்களும், தீர்ப்புக்காக காத்திருக்கின்றவர்களும், விசாரணைகளுக்காக பல வருடங்களாக காத்திருப்பவர்களுமே இருக்கின்றனர். விடுதலைப் புலிகளோடு உறவுகளைக் கொண்டிருந்தவர்களும், தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களும், விடுதலைப் புலிகளின் சொத்துக்களை பராமரிப்புச் செய்தவர்களும், தாக்குதல்களோடு நேரடியாகத் தொடர்புபட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழாக தமிழ் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டதும், விசாரணைகள் இல்லாமல் சிறைகளில் அடைக்கப்பட்டதும், கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறைகளிலேயே பல தமிழ் இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டதும் கடந்த காலத்தில் நடந்தேறியுள்ளது.
பல தசாப்தங்களாக விசாரணைகள் இன்றியும், தீர்ப்புகள் வழங்கப்படாமலும் தமிழர்களைத் தடுத்து வைக்கவும் ஏதுவான சட்டமாகவே பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் பிரயோகிக்கப்படுகின்றது. சீருடையோடும், சாதாரண உடையோடும் அத்துமீறி வீடுபுகுந்தும், எதிர்பார்க்காத எந்தச் சந்தர்ப்பத்திலும் கேள்வி கேட்பாரின்றி தமிழர்களை கைது எனும் பெயரால் இழுத்துச் சென்று சிறைகளில் அடைக்கும் அதிகாரத்தை பயங்கரவாதச் சட்டம் இலங்கை அரசுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
நல்லாட்சிஅரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் மனங்களையும் வென்றெடுக்க வேண்டும். அதற்காக, அரசாங்கம் பல முக்கியமான விடயங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய வேண்டிய விடயங்களில், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்பதும், தமிழர்களை அச்சுறுத்தாத சூழலை ஏற்படுத்தத் தடையாக இருக்கும் கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதும் முக்கியமாகும்.
தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி நல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இருந்தது. ஆனால் நல்லாட்சி அரசாங்கமோ மஹிந்த ராஜபக்சவை ஆட்சிகவிழ்ப்பதற்கு மட்டுமே தமிழ் மக்களை பாவித்துக் கொண்டுள்ளது. தமிழ் மக்களின் நம்பிக்கைகளையோ, எதிர்பார்ப்புக்களையோ நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
ஆனால் ஜனாதிபதியும், பிரதமரும் தமிழ் மக்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பவர்கள் போலவும், தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டிருப்பவர்கள் போலவும் பலவேறு கதைகளைக் கூறிவருகின்றார்கள்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றும், தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறவேண்டும் என்றும் கதை கதையாக கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
தன்னைக் கொலைசெய்ய வந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையிலிருந்தவரை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து ஜனாதிபதி புகழடைந்தார். ஆனால் பல வருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதில் அரசாங்கம் பின்னடித்துக் கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் சரித்திரத்தில் எந்தவொரு தமிழ் சிங்கள அரசாங்கமும் மனமுவந்து எந்த ஒரு உதவியையோ, அபிவிருத்தியையோ, விடுவிப்புக்களையோ செய்ததில்லை. அந்தந்த காலகட்டத்தில் ஏற்படுகின்ற அழுத்தங்கள் கோரிக்கைகள் அரசியல் தேவைகள் என்பவற்றின் காரணமாகவே நடைபெற்றிருந்தன.
நல்லாட்சி அரசில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் விருப்பத்துக்குரிய எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இருந்துகொண்டாலும், இணக்கஅரசியல் நடத்தும் அரசின் பங்காளியாகவே செயற்படுகின்றது. அரசுடனான இந்த உறவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக உச்சபட்சமாக முயற்சித்திருக்க வேண்டும்.
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சவால்களை சந்தித்து வருகின்ற இப்போதைய சூழலைப் பயன்படுத்தி குறைந்த பட்சம் சிறைகளில் பல ஆண்டுகளாக துயரம் சுமந்து அடைபட்டுக் கிடக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு தேவையான சட்ட மற்றும் ஆலோசனை உதவிகளை வழங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்திருக்க வேண்டும்.
நான்கு மாவட்டங்களில் சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஒரேநாளில் உண்ணாவிரதமிருக்கச் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்யவும், அதேநாளில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அட்டைகளைத் தாங்கிய போராட்டங்களை நடத்தவும் ஏற்பாடுகளைச் செய்தவர்கள். இந்த ஏற்பாடுகளையெல்லாம் ஒருநாள் கூத்தாகவும், அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும் கையாளக்கூடாது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தை மனிதாபிமானத்தோடும், நியாயத்துடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகி அவர்களின் விடுதலைக்கு உதவ வேண்டும் என்பதுதான் சிறையில் வாடும் உறவுகளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
-
ஈழத்துக் கதிரவன்.
ஈழத்துக் கதிரவன்.