முன்னாள் போராளிகளின் உயிரிழப்பு அரசின் தொடர்ச்சியான இன அழிப்பு

former fighters dead

இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, தற்போது நஞ்சு ஊசி ஏற்றப்பட்ட நிலையில் முன்னாள் போராளிகளும் உயிரிழந்து வருவதானது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான இன அழிப்பென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், திடீர் சுகயீனமுற்று மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றமையானது பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இவ்விடயம் குறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு நஞ்சு மருந்து ஏற்றப்பட்டமை குறித்து நீதியான விசாரணை நடத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்ட வேண்டுமென தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், இதனை ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களே பொறுப்பேற்று செய்யவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். காரணம், இலங்கை அரசாங்கம் நீதியான விசாரணையை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை இல்லையென்றும், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இல்லையென்றும் சுரேஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு முன்னாள் போராளிகளுக்கு நஞ்சு ஏற்றப்பட்டு அவர்களையும் அவர்களது எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், இவ்விடயத்தை சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கவனத்தில் எடுத்து நீதியான விசாரணைக்கும் சர்வதேச மருத்துவ பரிசோதனைக்கும் வழிவகுக்க வேண்டுமென கோரியுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila