நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று சனிக்கிழமை (06) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது “இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு அமைய சரணடைந்தோர் விபரம் இதுவரையில் வெளிவரவில்லை.
இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரிவிந்துகொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்றது. ஆனால், அதில் பயனில்லை. விசாரணைகள் வெறும் விசாரணைகளாகவே உள்ளன. ஆகவே, நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம். இலங்கை அரசாங்கம் ஐ.நா சபை வலியுறுத்திய விடயங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவது மட்டுமல்லாமல், எமக்கு சர்வதேச விசாரணையின் மீதே தற்போது நம்பிக்கை உள்ளது.
இதன் மூலமே சரியான தீர்வு எமக்கு அமையும். தற்போது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான செயலகம் பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசத்தில் நிறுவப்படவேண்டும். அத்தோடு, அதில் அங்கம் வகிப்பவர்களும் தமிழ் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். நமக்கு அதிகாரிகளுக்கும் இடையில் மொழி ஒரு பிரச்சினையாக இருக்ககூடாது. இச்செயலகம் கொழும்பில் அமையப்பெற்றால் நாம் சென்றுவருவது பெரும் பிரச்சினையாக இருக்கும். நமக்கு பாதுகாப்பு பிரச்சினையும் உள்ளது” என்றனர் மக்கள்.
மேலும், “இச்செயலகத்தின் ஊடாக கடத்தப்பட்டு, சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தனி விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இத்தனை வருடங்களில் நாம் சந்தித்த பிரச்சினைகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும். கடத்தப்பட்ட எமது பிள்ளைகள் தற்போது இரகசிய முகாம்களில் உள்ளனர். அவர்கள் எம்மிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
சம்பந்தபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கபடவேண்டும். கடத்தப்பட்ட காலங்களில் குறித்த பகுதியில் கடமையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். இவை அனைத்தும் சர்வதேச விசாரனைகள் மூலம் இடம்பெறவேண்டும்” எனவும் தெரிவித்தனர்.