உத்தியோகத்தில் இருப்பவர்களை விட மாணவர்களாக இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.
ஒரு மருத்துவரை விட, மருத்துவ பீட மாணவனுக்கான மதிப்பு அதிகம்.
இதேபோல பொருளியலாளரை விட, பொருளியல் பீட மாணவனுக்கான மதிப்பு அதிகம்.
ஆசிரியராக, அரச உத்தியோகத்தராக இருப்பவர்களைவிட பல்கலைக்கழக மாணவர்களாக இருப்பவர்களுக்கு எமது சமூகம் கொடுக்கின்ற மதிப்பு மிகவும் உயர்வானது.
இதற்குக் காரணம் என்னவெனில் கற்றுக்கொண்டிருத்தல் என்பது என்றும் உயர்வானதும் மரியாதைக்குரியதும் என்பதுதான்.
ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மீது மாணவர்கள் சிலர் குறை கூறுகின்றனர். ஆனால் அந்த ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை.
இருந்தும் கல்வி நிர்வாகம் ஆசிரியரை இடமாற்றம் செய்கிறது. அல்லது ஆசிரியருக்கே தண்டனை கொடுக்க முற்படுகிறது.
அட, இது நீதியா? நியாயமா? என்றால் அது நீதிதான். நியாயம்தான்.
ஏனெனில் மாணவர்களுக்கே பாடசாலை ஆசிரியர்களைவிட மாணவர் சமூகத்தின் கோரிக்கைக்கே முன்னுரிமை. இஃது எங்கும் இருக்கக்கூடிய ஒரு வழமை.
இந்த வழமையின் போக்கு மாணவப் பருவத்தோடு போய்விடுவதாலும்தான் மாணவர்களாக இருக்கின்ற காலம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மறக்க முடியாத காலமாகப் போற்றப்படுகிறது.
ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பருவத்தை முடித்து பட்டதாரிகள் என்று வெளிவந்து விட்டால் அவ்வளவுதான்.
இருந்த மதிப்பு, மரியாதை அனைத்தும் அடியோடு போய்விடுகிறது.
அதிலும் தமிழ்ப்பட்டதாரிகள் என்றால் அந்தோகதிதான். யாழ்ப்பாண செயலகத்துக்கு முன்பாக வட மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு அண்மையாக, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரில் என பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பர். அதையாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
ஐயா! நான்கு வருடங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றதால் உண்ணா விரதமா?, கவனயீர்ப்புப் போராட்டமா? இதென்ன அநியாயம்?
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து படித்தால், பசியின்; தனிமையின்; விழிப்பின் முதலெழுத்துக்கள் ஒன்றுகூடி பதவியைத் தரும் என்று நம்பித்தானே படித்தனர்.
ஆனால் இக்காலத்தில்; பதவியை, உத்தியோகத்தைப் பெறுவதற்கு நம் பட்டதாரிகள் படும் கஷ்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனம் வேதனையில் தத்தளிக்கிறது.
சிங்கள மாணவர்கள் பட்டம் முடித்ததும் படைத் தரப்பில், பொலிஸ் பிரிவில், விமான நிலையத்தில், கலால் படையில், வன இலாகாப் பிரிவில், வருமானம் மற்றும் வரியமைப்பு உள்ளிட்ட அரச பணிகளிலும் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களிலும் வேலைக்கு அமர்ந்து விடுகின்றனர்.
ஆனால் எங்கள் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு ஒன்றில் ஆசிரியப் பணி அல்லது முகாமைத்துவ உதவியாளர் பதவி. இதைவிட்டால் வேறு எதுவும் இல்லை என்றாயிற்று.
இந்த அவலமான நிலையைத் தவிர்க்க வேண்டும். தமிழ்ப்பட்டதாரிகளையும் நாடளாவிய ரீதியிலான அரச பணியில் இணைக்க வேண்டும்.
கொழும்பில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பில் நம் பட்டதாரிகளுக்கு இடம்கொடுத்தால் தான் அவர்களும் ஊர் அடிபட்டு, மொழி கற்று தங்கள் ஆளுமையை வளர்ப்பர்.
எனவே இது விடயத்தில் பொறுப்பானவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


