எமது கைவிரல்களாலேயே எமது கண்களைக் குத்தவைக்கும் முயற்சியில் இராணுவம் – பொ.ஐங்கரநேசன்

எமது கைவிரல்களாலேயே எமது கண்களைக் குத்தவைக்கும் முயற்சியில் இராணுவம்  - பொ.ஐங்கரநேசன்

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆனால், சிவில் பாதுகாப்புப் படையில் இணைந்து பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நாங்கள் வேலை கொடுப்போம் என்ற உத்தரவாதம் வழங்கினாலே பண்ணையை விட்டு வெளியேறலாம் என்று இராணுவம் நிபந்தனை விதித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிவில் பாதுகாப்புப் படையில் உள்ளீர்க்கப்பட்ட எமது உறவுகளை வைத்தே இராணுவத்திடமிருந்து விவசாய நிலங்களைப் பறிக்காதே என்று எமக்கு எதிராக இராணுவம் ஆர்ப்பாட்டங்களையும் ஒழுங்குசெய்கிறது. எமது கைவிரல்களைக் கொண்டே எமது கண்களைக் குத்தும் முயற்சியில் இப்போது இராணுவம் இறங்கியுள்ளது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் நிலக்கடலை விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (26.04.2017) முல்லைத்தீவில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
போருக்கு முன்னர் வடக்குக்குத் தேவையான தரமான விதை நெல்லையும் ஏனைய விதைகளையும் வட்டக்கச்சி விதைஉற்பத்திப் பண்ணையிலேயே எமது விவசாயத் திணைக்களம் உற்பத்தி செய்தது. ஆனால் இன்று விவசாயத் திணைக்களம் 441 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய அந்தப் பண்ணையில் ஒரு மூலையிலேயே குந்திக் கொண்டிருக்கிறது. 410 ஏக்கர் பண்ணையை இராணுவமும், இராணுவத்தின் இன்னுமொரு வடிவமான சிவில் பாதுகாப்புப் படையும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. இதனால் எமக்குத் தேவையான நல்லின நடுகைப் பொருட்களை இப்போது எம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை.
யுத்தம் முடிவடைந்ததும் விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற காரணத்தைக் கூறி பண்ணையில் இராணுவம் நிரந்தரமாகக் குடியேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல், எமது இளைஞர்களையும் யுவதிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில், தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்தது. அவர்களை வைத்து இப்போது விவசாயம் செய்வித்து, எமது விவசாயிகளுக்குப் போட்டியாக சந்தையில் வியாபாரமும் செய்து வருகிறது.
பாதுகாப்பு அமைச்சால் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டவர்களுக்குப் படையினருக்குரிய சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தச் சம்பளத்தை மாகாணசபை வழங்க முன்வருமானால் மாத்திரமே பண்ணையை விடுவிக்க முடியும் என்று நிறைவேற்ற முடியாத நிபந்தனையொன்றைப் படைத்தரப்பு இப்போது அறிவித்திருக்கிறது இந்த அறிவிப்பின்மூலம் இராணுவம் மாகாணசபையின் மீதும், விவசாயிகள் மீதும் சிவில் பாதுகாப்புப் பிரிவில் உள்ள எமது உறவுகளைக் குரோதம் கொள்ள வைத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
விதைகள் வழங்கும் நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் ஆகியோரும் அதிக எண்ணிக்கையான விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila