வடக்கு மாகாணசபை மேலதிக உறுப்புரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் உறுப்பினராக உள்வாங்கப்பட்ட அ.அஸ்மிடம் இன்னொருவருக்கு குறித்த உறுப்புரிமையை வழங்கும்படி அந்த அமைப்பு கோரிக்கைவிடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியதன் அடிப்படையில் இரண்டு உறுப்புரிமைகள் மேலதிகமாக கிடைக்கப்பெற்றன.
அவற்றில் ஒன்றினை கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையில் வருடாந்தம் பகிர்ந்து கொள்வது என்றும் மற்றைய ஆசனத்தை முஸ்லிம் மக்களுடனான இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அந்த இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதென்றும் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது.
குறித்த தீர்மானத்துக்கு அமைய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினைச் சேர்ந்த அ.அஸ்மின் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் அவருடைய உறுப்புரிமையை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு வழங்கும்படி அஸ்மினுக்கு அந்த அமைப்பு வலியுறுத்தல் கடிதம் அனுப்பியிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் அமைய உள்வாங்கப்பட்ட அஸ்மின் தமிழரசுக்கட்சியின் குரலாகச் செயற்பட்ட அதேவேளையில் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளை விமர்சிக்கும் நிலைக்கும் சென்றிருந்தார்.
இந்தநிலையில் தன்னுடைய பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்த கோரிக்கையினை நிராகரிக்கும் வகையிலான முனைப்புக்களில் அவர் ஈடுபட்டுவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்க அஸ்மின் தவறினால் குறித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடுத்த கட்ட நடவடிக்கையோ அஸ்மினின் எதிர்கால அரசியல் வாழ்க்கையோ நெருக்கடி மிக்கதாக அமையலாம் என்று அவதானிகள் கருத்துவெளியிட்டிருக்கின்றனர்.
இதனை சூசகமாக தெரிவிக்கும் வகையில் தன்னுடைய முகநூலில் அவர் பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே தமது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கருத்துவெளியிடுபவர்களையோ, செயற்படுபவர்களையோ கடுமையாகத் தண்டிக்கும் தமிழரசுக்கட்சி இந்த விடயத்தில் எந்த வகையிலான செயற்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.