முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்க வேண்டும் - த.தே.ம.முன்னணி


இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்க வேண்டும்  என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில்  அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரால் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை வருமாறு,

எதிர்வரும் மே 18ஆம் நாள் தமிழ் மக் கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 8ஆவது ஆண்டு நினைவு நாளாகும். இவ் இனவழிப்பு நாளை  நினைவு கூர வேண்டியது அனைத்து தமிழ் மக்களினதும் கடமையாகும். 

ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தச் சட்டத்தையும் அதன் கீழான மாகாண சபை முறையும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைத் தீர்வாக திணிக்க முற்பட்ட போது, மேற்படி மாகாணசபை முறையை  தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாதென்பது மட்டுமல்ல, தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கூட இருக்க முடியாதென உறுதிபட நிராகரித்த தமிழ் மக்கள் அதற்கெதிராக அதி உச்ச தியாகங்களைச் செய்து போராடியுள்ளனர். அவ் உச்சக்கட்ட தியாகங்களின் இறுதி அங்கமே முள்ளிவாய்க்கால் பேரவலாகும்.

இந்த நினைவேந்தல் நிகழ்வானது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை முன்னிறுத்தி கட்சி, அமைப்பு பேதமின்றி அனைத்து தரப்பினரையும் முழுத் தமிழர் தாயகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முன் னெடுக்கப்படுதல் சாலச் சிறந்தது என்று நாங்கள் கருதுகின்றோம். 

எனவே இவ் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமையேற்று அனைத்துத் தமிழ் மக்களையும் ஒருங்கிணைத்து நினைவு கூர வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழ் மக்கள் பேரவையின் கைகளில் உள்ளது. அந்த வகையில் தனது வரலாற்றுக் கடமையினை உணர்ந்து மேற்படி இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வை த.ம.பேரவையானது  தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதன் அங்கத்துவ அமைப்பு என்ற அடிப்படையில் மிகவும் உரிமையுடன் விடுக்கின்றோம்.

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா உள்ளிட்ட இணைத் தலைவர்கள் தலைமையில் மேற்படி நிகழ்வு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அந் நிகழ்வை உணர்வுபூர்வமாக நடத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை அர்ப்பணித்து செயற்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். 

மாகாண சபை முறையினை ஏற்க மறுத்து மேற்கொள்ளப்பட்ட ஓர் போராட்டத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் தியாகங்களையும் நினைவுகூருகின்ற நினைவேந்தல் நிகழ்வை அப்போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண சபையூடாக மேற்கொள்வது என்பது இதுவரை காலமும் தமிழ் மக்கள் செய்த தியாகங்களையும், சந்தித்த இழப்புக்களையும் கொச்சைப்படுத்தும் என்பதால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட மாகாண சபை முன்னெடுக்கும் எத்தகைய நினைவேந்தல் நிகழ்வுகளிலிருந்தும் தவிர்க்க முடியாதவாறு விலகியே நிற்கும் என்பதை அறியத் தருகின்றோம். 

தமிழ் மக்கள் பேரவையினால் இந் நிகழ்வை தலைமையேற்று ஏற்பாடு செய்ய முடியாத சூழ்நிலைகள் இருப்பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்படி நினைவேந்தல் நிகழ்வை தனித்து முன்னெடுக்கும் என்பதனை அறியத்தருகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila