முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டிக்கு வைத்தியகலாநிதி வரதராஜா கடும் எதிர்ப்பு!

Dr Varatharajah

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரிலான போட்டியை தமிழ் விளையாட்டுக்கழகங்கள் புறக்கணிக்கவேண்டும் என்று இறுதிப்போரில் மக்களுக்கு அளப்பெரும் பணி ஆற்றிய வைத்தியகலாநிதி துரைராஜா வரதராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்கால் என்பது இப்பொழுது ஒரு இடத்தின் பெயராக இல்லாது எம் தமிழ் இன அழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் தான் எம் மக்கள் மிகவும் கொடூரமாக இலங்கை அரச படைகளால் கொல்லப்பட்டார்கள். இதனை நினைவுகூரும் முகமாக ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் நாள் தமிழ் இனவழிப்பு நாள் / முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவு கூரப்படுகிறது.
எனவே இக்காலப்பகுதியில் சில விஷமிகளால் நடத்த திட்டமிட்ட விளையாட்டுப்போட்டியை நடத்தக்கூடாதென்றும், அதில் எந்தவொரு தமிழ் விளையாட்டுக்கழகங்களும் கலந்துகொள்ளக்கூடாதென்று கோரிக்கை முன்வைத்துள்ள அவர்,
நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒரு அரசியல் நிகழ்வாக இல்லாது, எம்மக்கள் தாமாகவே இந்த நினைவு கூறல் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
அதேவேளையில் கடந்த காலங்களைப்போல் இல்லாது இம்முறையும் இனிவரும் காலங்களிலும் யுத்தநேரத்தில் அங்கு கடமையாற்றிய Dr.. த.சத்தியமூர்த்தி அவர்களால் இந்த நினைவுகூரல் நிகழ்வை ஆரம்பித்து வைப்பது / தலைமை தாங்கி நடத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடும் அவலத்தை சந்தித்த வைத்தியசாலை இயங்கிய முள்ளிவாய்க்கால் பாடசாலையில் அல்லது அந்த பகுதியில் ஒரு நினைவாலயம் அமைக்க வேண்டும் என்றும் அனைவரையும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இறுதிப்போர் நடைபெற்ற திருகோணமலை வாகரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் செத்துவீழ்ந்தபோது பொருளாதார மற்றும் மருந்துத் தடைகளின் மத்தியிலும் மக்களுக்காக அரும்பணியாற்றியிருந்தவர் வைத்திய கலாநிதி வரதராஜா.
வன்னியில் போர் தீவிரம் பெற்றவேளையில் ஓமந்தைச் சோதனைச்சாவடியின் ஊடாக நெருக்கடிகளைக் கடந்து வன்னிக்குச் சென்று இறுதிவரையில் வன்னியில் பணியாற்றியிருந்தார்.
மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மருத்துவ மனைச் செயற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரே வைத்திய அதிகாரிகள் இராணுவ எல்லைக்குள் சென்றிருந்தனர். மே மாதம் 16ஆம் திகதி இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்திருந்த வைத்தியகலாநிதி துரைராஜா வரதராஜா மயங்கியநிலையிலேயே தூக்கிச் செல்லப்பட்டிருந்தார் என்பதும் வன்னியில் எறிகணைத் தாக்குதலில் உயிர்பிழைத்த பல்லாயிரம் மக்களின் நன்றிக்குரியவராக விளங்கிவருகின்ற வைத்தியகலாநிதி துரைராஜா வரதராஜா இன்றுவரையில் சர்வதேசத்தின் மத்தியில் வன்னியில் இழைக்கப்பட்ட அநீதிக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila