இன்று வெசாக் பண்டிகை. கெளதம புத்த பிரான் பரிநிர்வாணம் அடைந்த நாள்.
உலகில் உள்ள அத்தனை பெளத்தர்களும் போதிமாதவனை தொழுது வணங்குகின்ற சிறப்புக்குரிய நாள்.
பெளத்தம் என்பதை ஒரு சமயமாக எவரும் பார்ப்பதில்லை. அது ஒரு தத்துவார்த்தம்.
கெளதம புத்தபிரானின் போதனைகள் மனித வாழ்வைச் செம்மையாக்கக்கூடியவை. புத்தபிரானின் போதனைகளை பெளத்தர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.
எனினும் புத்தபிரான் பரிநிர்வாணம் அடை ந்த வெசாக் தினத்தை பெளத்தர்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனராயினும் அந்தளவுக்கு புத்த பிரானின் போதனைகளை அவர்கள் பின்பற்றுகிறார்களா? என்பது கேள்விக்குரியதுதான்.
ஆக, இலங்கையைப் பொறுத்தவரை கெளதம புத்தபிரானின் போதனைகளுக்கு அப்பால் பெளத்தமே மேனிலைப்பட்டுள்ளது.
இலங்கையில் பெளத்த மதம் பரவிய வரலாறுகளே வெசாக் பண்டிகையின் அடிப்படையாக உள்ளது.
தவிர, இலங்கை பெளத்த சிங்கள நாடு. இந்த நாட்டில் வேறு எவரும் உரிமை பாராட்ட முடியாது என்ற சிந்தனையை அமுல்படுத்தும் வகையிலும் வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்கள் அமைந்துள்ளன.
மதச் சடங்குகள், சம்பிரதாயங்கள் மனித வாழ்வுக்கு அடிப்படையானவை. அதற்காக கெளதம புத்தபிரானின் போதனைகளை மூடி வைத்துவிட்டு பெளத்த மதத்தை தமக்கான அடையாளமாகவும் நாட்டை தமக்குரியதாக்கு வதற்காகவும் காட்சிப்படுத்த முற்படுவது எந்த வகையிலும் புத்தபிரானின் போதனைகளுக்கு உடன்பாடானதல்ல.
இலங்கை என்ற இந்த நாடு பெளத்த பூமி என்றால், பெளத்தர்கள் போர் புரிந்து தமிழர்களை வதைத்தது எந்த வகையில் நியாயமா கும் என்ற கேள்வி எழவே செய்யும்.
இந்த வகையில் இலங்கையைப் பெளத்த நாடாகக் காட்டுவதை மட்டுமே நோக்காகக் கொண்ட பண்டிகைகள், திருவிழாக்கள் எவை யும் மனித முன்னேற்றத்துக்கு உதவப் போவதில்லை என்பதே உண்மை.
இந்த உலகில் அனைத்து ஜீவராசிகள் மீதும் கருணை காட்டுமாறு கூறிய கெளதம புத்தபிரானின் உபதேசம் எத்தன்மையது என்பதை அறிந்து வாழ்க்கையில் அதைப் பின்பற்றத் தூண்ட வேண்டும்.
கெளதம புத்தபிரானின் போதனைகள் அமுல்படுத்தப்படுவது மிகவும் அவசியமாகும்.
இதைவிடுத்து இடம்பிடிப்பதாகவும் இந்த நாட்டை பெளத்த நாடாகக் காட்டுவதற்காகவும் கெளதம புத்தபிரானின் உருவச் சிலைகளை ஒவ்வொரு இடங்களிலும் நிறுவுவதால் அவ ரின் இலக்கு எட்டப்பட மாட்டாது.
எனவே இன்றைய புனிதமான வெசாக் பண்டிகை நாளில் சமய அனுட்டானம் சமயச் சடங்கு அடையாளப்படுத்தல் என்பதைக் கட ந்து புத்தபிரானின் போதனைகளைப் பின்பற்றுதல் என்ற பாதையை நோக்கி இந்த நாட்டின் பெளத்த சகோதரர்கள் பயணிக்க வேண்டும்.
இது ஒன்றுபோதும் இலங்கையில் நிலைத்த சமாதானம் ஏற்படுவதற்கு.