முள்ளிக்குளம் மக்களின் 38 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் அவர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்று 10 தினங்களை கடக்கின்ற போதும் அந்த மக்கள் தமது சொந்த காணிகளில் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார்.
முள்ளிக்குளம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
”முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட இடங்களில், இரண்டு நாட்களின் பின்னர் மக்கள் தாம் விரும்பிய இடங்களில் குடியமர முடியும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் பத்து நாட்களாகியும் தாமதமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை, மக்களுக்கு நம்பிக்கை அற்ற தன்மையை உருவாக்குகின்றது.
தற்போது அந்த மக்கள் முள்ளிக்குளம் ஆலயத்தில் இருக்கின்றார்கள். இங்கு 10 நாட்கள் இருப்பது என்பது அசௌகரியமானது. தமது சாதாரண வாழ்க்கையை வாழ முடியாத நிலையில் அந்த மக்கள் உள்ளனர்.
மக்களுக்கு போதிய அளவு மலசலகூட வசதிகள், குடிநீர் வசதிகள் உட்பட எவ்வித தேவைகளும் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
தமது சொந்தக் காணிகளில் சிறிய கொட்டில்களை அமைத்தாவது வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கின்றார்கள்.
இந்நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக அவர்களின் காணிகளில் குடியமர்வதற்கு உடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.