இந்த வாக்கெடுப்பு இலங்கைக்கு அச்சத்தைக் கொடுத்திருந்தாலும், அதன் முடிவு சாதகமாகவே அமைந்திருக்கிறது. இந்த வாக்கெடுப்பு எதற்காக நடத்தப்பட்டது என்ற புரிதல் பலருக்கும் இல்லை. தமிழ் ஊடகங்கள் பலவும் கூட குழப்பமான செய்திகளையே வெளியிட்டன.
இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது போலவும், இதில் இலங்கை வெற்றிப்பெற்று விட்டது என்பது போலவும், பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை, அத்துடன், இந்த சலுகைக்கு இன்னமும் அங்கீகாரம் அளிக்கப்படவுமில்லை.
கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள ஐரோப்பிய ஐக்கிய இடதுசாரிகள் மற்றும் நோர்டிக் கிறீன் இடதுசாரிகள் குழுக்களைச் சேர்ந்த 52 பாராளுமன்ற உறுப்பினர்களின் சார்பில், ஒரு பிரேரணை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
B8 0273/2017 இலக்கமுடைய அந்த பிரேரணை மீது தான் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இலங்கை்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் பிரேரணையே அது.
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கரிசனை எழுப்பியிருந்த இந்த தீர்மானத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதியைப் பெறுவதற்கு போதுமான, உண்மையான முன்னேற்றங்கள் இலங்கையில் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு மாறான சட்டத்தை கொண்டு வர இன்னுமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் அரசாங்கப் பதவிகள் அளிக்கப்படுவதனால், தண்டனையில் இருந்து விலகும் பெறும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லையோ என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டடிருந்தது.
மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்களில் இலங்கை கவலையளிக்கும் அளவுக்கு மெதுவாகவே செயற்படுவதாக சுட்டிக்காட்டியே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.
இப்படியொரு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.
உலகமெங்கும் நண்பர்களை உருவாக்கியிருக்கிறோம், எதிரிகளே இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கூறிக்கொள்ளும் நிலையில் தான், இலங்கைக்கு இந்தச் சலுகையை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருந்தது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் இருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பிளஸ் சலுகையை மீளப்பெறுவோம் என்று கூறி வந்திருக்கிறது. அதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளையும் பேச்சுக்களையும் நடத்தியிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளுக்கு, 6600 பொருட்களை தீர்வையின்றி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும். சுமார் 10 வீத தீர்வையைச் செலுத்தாமல் ஐரோப்பிய சந்தையை இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் அடையும் பொது, அங்கு இந்தப் பொருட்களின் விலைகள் குறையும்.
அதன் மூலம் ஏனைய நாட்டு உற்பத்திகளுடன் இலகுவாகப் போட்டி போட முடியும். விலை குறையும் போது ஐரோப்பிய சந்தைகளில் ஏற்றுமதி வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்ளலாம்.
இதனால் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக இலங்கை அரசாங்கம் ஒற்றைக்காலில் நிற்கிறது. இந்தச் சலுகை இலங்கைக்கு எற்கனவே கிடைத்து வந்த ஒன்று தான்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை காரணம் காட்டி 2010 ஆம் ஆண்டில் இந்தச் சலுகையும் பறிக்கப்பட்டிருந்தது.
நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு விட்டது, ஜனநாயகம், மனித உரிமைகளை மதிக்கின்ற நிலைமைகள் ஏற்பட்டு விட்டன என்று கூறியே, மீண்டும் இந்தச் சலுகைக்கு அரசாங்கம் விண்ணப்பித்திருக்கிறது.
இந்தச் சலுகைக்காக விண்ணப்பித்த போது, ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, சர்வதேச தர நியமங்களுக்கு ஏற்ற புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் ஐரோப்பிய ஒன்றித்தினால் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கடுமையான இழுபறிகளை சந்தித்து வந்தது. இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்பின் கீழ் வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
அதனைத்தான், அமைச்சர்கள், இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்து விட்டது என்று கூறியிருந்தனர். ஐரோப்பிய பாராளுமன்றமும் பேரவையும் தான் இதனை முடிவு செய்ய வேண்டியிருந்த நிலையிலேயே ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெற்றது.
ஐரோப்பிய பாராளுமன்றமும், பேரவையும் தான் இதனை முடிவு செய்ய வேண்டியிருந்த நிலையிலேயே ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இலங்கையின் எல்லா முயற்சிகளும் வீணாகிப்போயிருக்கும்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 751 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் இவர்களில் குறைந்தது 376 பேர்அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் கூட நிலைமைகள் தலைகீழாகியிருக்கும்.
இதனால்தான் பிரதி வெளிவிவகாரஅமைச்சர் ஹர்ச டி சில்வாவை அரசாங்கம் களமிறக்கியது. ஹர்ச டி சில்வா அவுஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டிருந்த போதுதான் இந்த தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. அவர் அடுத்ததாக பிரசெல்சுக்கு பயணம் மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்தார்.
பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு மற்றும் கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் குழு ஆகியவற்றின் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு ஆய்வு பயணத்திற்கு திட்டமிட்டப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த உறுப்பினர்களுக்கான செயலமர்வுகள் பிரெசல்சில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
ஹர்ச டி சில்வா கோப் குழுவின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் பிரசெல்ஸ் செல்லவிருந்தார். கூட்டு எதிரணியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார , சுனில்ஹந்துன்நெத்தி, த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்களும் பிரசெல்ஸ் சென்றிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் அதனை முறியடிப்பதற்கான பேச்சுக்கள், சந்திப்புக்களில், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வாவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேராவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
கடுமையான பிரச்சாரங்களை இவர்கள் மேற்கொண்டிருந்தனர். இவர்களுடன் கோப் மற்றும் பொது கணக்கு குழு என்பவற்றின் உறுப்பினர்கள் சந்திப்புக்களில் ஈடுபடவில்லை.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனையை நிறைவேற்றும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவில் திருத்தங்கள் செய்யப்பட்டு அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஏப்ரல் 27ஆம் திகதி இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 119 உறுப்பினர்களின் ஆதரவு மாத்திரமே அதற்கு கிடைத்தது. 436 உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். 22 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதன் மூலம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை தொடர்பாக இலங்கைக்கு கண்டம் நீங்கியிருக்கின்றது. ஆனால் இந்த வாக்கெடுப்பின் முடிவு பற்றிய செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள், இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற்று விட்டதாக செய்தி வெளியிட்டன.
அதுமாத்திரமன்றி, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்கக்கோரி ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரச்சாரம் செய்ததாக சில தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
சிறீதரன், வாசுதேவ நாணயக்கார, சுனில் ஹந்துநெத்தி போன்றவர்கள் பிரசெல்ஸுக்கு மேற்கொண்ட பயணத்துக்கும், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்க அடிபணிந்து ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற வேண்டிய தேவை கிடையாது என்று கூறும் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய விசுவாசியான வாசதேவ நாணயக்கார, ஐரோப்பிய ஒன்றியத்தில் போய் இலங்கை அரசுக்காக பிரச்சாரம் செய்வாரா, இந்த நிலையில் கூட்டமைப்பில் இருந்த கடைசி தமிழ்த் தேசியவாதியான சிறீதரனும் விலைபோய் விட்டார் என்பது தான் சாவகச்சேரியில் நடந்த மேதினக் கூட்டத்தின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது.
பிரசெல்ஸுக்கு அவர் மேற்கொண்ட பயணத்தை முன்வைத்தே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஊடகங்கள் மாத்திரமல்ல, அரைகுறையாக விளங்கிக் கொள்ளும் அரசியல்வாதிகளும் தெற்கில் மாத்திரமல்ல வடக்கிலும் தாராளமாகவே இருக்கின்றார்கள் என்பதைத்தான் இது உணர்த்தியிருக்கின்றது.
இன்னமும் கூட ஜி.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்துவிடவில்லை. இம்மாதம் நடுப்பகுதியில் அதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படலாம். ஆனாலும் இந்தச்சலுகை மூன்று ஆண்டுகளுக்குத் தான் கிடைக்கப்போகின்றது. அதுவும் கூட கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டே வழங்கப்படும் என்பதே உண்மை.