நிலைமைகள் முற்றுமுழுதாக மாறி வருகிறது. மக்களின் தேவைகள் வேறாக இருக்க, நம் அரசியல்வாதிகள் இன்னும் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் செயற்படுகின்றனர்.
நல்லாட்சியின் ஆயுள் சடுதியாக குறைந்து வருகிறது. நல்லாட்சியை தமிழர்கள் எதிர்த்தால் அது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமாகி விடும் என நம் அரசியல் தலைமை கூறுகிறது.
நல்லாட்சியைத் தமிழர்கள் எதிர்க்கவில்லை என்பதாலேயே மகிந்த ராஜபக்சவின் மே தின எழுச்சிக் கூட்டத்தில் இலட்சக்கணக்கான சிங்கள மக்கள் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு இலட்சக்கணக்கான சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான மே தின எழுச்சிக் கூட்டத்தில் அணி திரண்டனர் என்பதற்கு பின்னால்,
மகிந்த தரப்பு மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் சிங்கள மக்களிடம் விரைவாக செல்லுபடியாகிறது என்றறிவதும் அவசியமானதாகும். எது எப்படியாயினும் அடிப்படை வாழ்வாதாரம் என்பது மிகவும் முக்கியமானது.
அடிப்படை வாழ்வாதாரத்துக்குரிய கட்டுமானங்கள் பற்றி நாம் சிந்திக்காமல் வெறுமனே அரசியல் மட்டும் பேசிக் கொண்டிருப்போமாக இருந்தால், தமிழ் அரசியல்வாதிகளை தமிழ் மக்களே தூக்கி எறியும் நிலைமை விரைவில் உருவாகும்.
ஆக, மக்களின் அடிப்படை வாழ்வாதாரத் துக்கான கட்டுமானங்கள், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உற்பத்தி நிறுவனங்களின் உருவாக்கம் இவை பற்றி சிந்திக்கும் அதேவேளை, சமாந்தரமாக அரசியல் விவகாரங்களையும் முன்னெடுப்பது அவசியமாகும்.
மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல்; பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை ஒரு தரப்பு கவனிக்க, மறுபக்கத்தில் இன்னொரு தரப்பு அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதாகக் கூட இருக்கலாம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
அதேவேளை எங்கள் புலம்பெயர் உறவுகளை எங்களோடு இணைப்பதற்கும் அவர்களின் ஆலோசனைகள், உதவிகள், பங்களிப்புக்கள் என்பவற்றைப் பெறுவதற்கும் விசேட திட்டம் உருவாக்கப்பட்டு அதனை தனியான குழுமம் கவனிப்பதாக இருக்க வேண்டும்.
குறிப்பாக எங்கள் தமிழர் தாயகத்தின் உற்பத்திப் பண்டங்கள், உணவுப் பொருட்கள் இவற்றுக்கு நல்லதொரு வெளிநாட்டு சந்தை வாய்ப்பு எங்கள் புலம்பெயர் மக்களால் உருவாகியுள்ளது.
முன்பெல்லாம் எங்கள் இடத்து உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டு சந்தையில் வாய்ப்பில்லை என்ற ஒரு சூழ்நிலை இருந்தது.
ஆனால் இன்று எங்கள் புலம்பெயர் மக்களால் அந்தக் குறைபாடு நீங்கியுள்ளது.
எங்கள் ஊர் முருங்கைக்காய் முதல் வேப்பம்பூ வடகம், புளுக்கொடியல், ஒடியல், மொட்டைக் கறுப்பன் அரிசி, கைக்குத்தரிசி என எங்கள் மண்ணின் விளைபொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தையில் கிராக்கி உண்டு.
இதை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இது பற்றி எங்கள் பொருளியலாளர்களும் தமது கருத்துக்களைப் பதிவு செய்வது அவசியம்.
தவிர, ஊடகங்களும் தனித்து அரசியல் என்ற எல்லைகளுக்குள் முடங்காமல் மக்களின் வாழ்வாதாரத்தின் பக்கமாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
அப்போதுதான் நாம் கேட்கின்ற உரிமை என்ற விடயத்துக்கு எங்கள் மக்கள் பெறுமதி கொடுப்பர்.