புல்லாகி பூடாகி புழுவாகி பொய்யாகி பொய்யே மெய்யாகி...


யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து இத்தகவல் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
எனினும் உடனடியாக இப்படியயாரு தகவலை  பொலிஸார் வெளியிட்டிருப்பது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, உண்மையிலேயே நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்படவில்லை என்றால், அதனை நிரூபிப்பதற்கு பல்வேறு ஆதாரங்களை முன்வைப்பது பொலிஸாரின் கடமை யாக இருந்திருக்கும்.

இதைவிடுத்து ஆரம்ப கட்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறுவதானது,
நடந்த சம்பவத்தை திசைதிருப்பும் முயற்சியா? என்ற கேள்வி எழவே செய்யும்.

ஏனெனில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்த விதம், அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன பொருந்தி வருவதென்பது இயல்பாக நடக்கக் கூடியதன்று. ஆனால் இங்கு சந்தர்ப்ப சூழ் நிலைக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் உள்ளன. 

அதாவது நல்லூர் முருகன் ஆலயத்தின் தென்மேற்கு மூலையாக, கோயில் வீதியில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் என்பது, மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வருகின்ற பாதையாகவுள்ளது; அவர் வரு கின்ற நேரமாகவுள்ளது; வீதியில் இருக்கக் கூடிய அசாதாரண நிலைமைகளை விலத்தி நீதிபதியின் பயணத்துக்கு ஒழுங்கு செய்யக் கூடியதான பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் வருகின்றார்.

பொதுவில் வீதிகளில் சண்டை பிடிப்பவர்கள் பொலிஸாரைக் கண்டால் ஓடி மறைவது தான் வழக்கம்.
ஆனால், இங்கு சண்டையில் ஈடுபட்டவர்களை விலக்குப் பிடித்து நீதிபதியின் பயணத்துக்கு உதவுவதற்காக மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய பொலிஸாரின் துப்பாக்கி பறிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தர்க்கம் ஏற்படும் போது பறித்த துப்பாக்கியை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடுவது தான் பொதுவில் நடக்கக்கூடிய சம்பவம்.

அல்லது பொலிஸாரிடம் இருந்து பறித்த துப்பாக்கி மூலம் தான் சண்டை பிடித்த நபரைச் சுடுவதற்கான முயற்சிகளே இடம்பெற்றிருக்க வேண்டும்.

எனினும் அப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக பொலிஸாரைச் சுடுகின்ற சம்பவமே நடந்துள்ளது.

தவிர, துப்பாக்கியால் சுடுகின்ற பயிற்சியையும் தேர்ச்சியையும் சம்பந்தப்பட்டவர் கொண்டுள்ளார்.

ஆக, குறித்த கொலையாளியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கடுமையாகப் போராடியிருக்கிறார்.

இதேசமயம் காரில் இருந்த நீதிபதி இளஞ்செழியனின் மற்றைய மெய்ப்பாதுகாவலர் குறித்த நபரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். அதன் பின்பே கொலையாளி தப்பி ஓடியுள்ளார்.

ஆக, இது ஒரு திட்டமிட்ட சம்பவம் என்று ஊகிப்பதற்கு நிறையச் சான்றாதாரங்கள் உண்டென்றே கருத வேண்டியுள்ளது. 

ஆகையால் இது விடயத்தில் நேர்மையான, பக்கச்சார்பற்ற விசாரணை மிக மிக அவசியமாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila