துப்பாக்கிதாரி துப்பாக்கியை கையாண்ட விதத்தை பார்க்கும் போது அவர் துப்பாக்கியை கையாள்வதில் மிகவும் அனுபவம் மிகுந்த ஒருவர் என்பதை அவதானிக்க முடிந்தது.
என்னுடைய மெய்ப்பாதுகாவலர்களை யாருக்கும் தெரியாது. அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கான அவசியமும் கிடையாது. இதனை நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கின்றேன்.
இவை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முன்னரும் சம்பவத்தின் பின்னரும் நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களாகும்.
யாழ். நல்லூர் பகுதியில் வைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர்கள் நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.
இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றும் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சன நெரிசல் மிக்க ஒருபகுதியில் வைத்து மிகவும் துணிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவத்தில் நீதிபதி மா. இளஞ்செழியன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இது இவ்வாறு இருக்கையில், ஏன் நீதிபதி மா. இளஞ்செழியன் இலக்கு வைக்கப்பட வேண்டும்? அவர் இலக்கு வைக்கப்படுவதற்கான காரணம் என்ன? இது திட்டமிட்ட சதியா? அல்லது ஏதேச்சையாக இடம்பெற்ற ஒன்றா என்ற கேள்விகள் எழுகின்றது.
நீதிபதி மா. இளஞ்செழியன் குறிப்பட்டதை போன்று உண்மையில் அண்மைக்காலமாக அவர் கையாளுகின்ற வழக்குகள் யாவும் உயிர் அச்சுறுத்தல் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
அதிலும், குறிப்பாக அண்மையில் சூடுபிடித்துள்ள வழக்கு விசாரணையே புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு. இந்த வழக்கு நீதிமன்ற தீர்ப்பாய முறையில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் முக்கியமான பலர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் முக்கிய அரசியல்வாதி ஒருவரும் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இவ்வாறான நிலையிலேயே நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனை வெறும் சாதாரண சம்பவமாக பார்க்க முடியாதுள்ளது.
காரணம் வித்தியா படுகொலை தொடர்பில் அண்மைக்கால விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்கள் அனைவரையும் உறைய வைக்கும் அளவில் மோசமானதாக இருக்கின்றன.
குறிப்பாக வித்தியா படுகொலையின் போது பரிமாறப்பட்ட பணம் மற்றும் அதன் பின்னணியில் இருக்கின்ற மாபியா குழு தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தான் இந்த படுகொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் இருவராக இருக்கும் சுவிஸ் குமார் தொடர்பிலும், அவர் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவியதாக தெரிவிக்கும் பொலிஸ் அதிகாரிகள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சுவிஸ் குமார் கொழும்புக்கு தப்பிச்சென்ற சம்பவத்தின் பின்னணியில் அரசியல்வாதி ஒருவர் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியா கொலை வழக்கில் இனியும் கைதுகள் இடம்பெறாமல் இருக்கவும், இந்த கொலை வழக்கை திசை திருப்பும் நோக்கிலும் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவத்தில் அரசியல்வாதியின் கைது தொடர்பில் செய்திகள் வெளியாகிய பின்னர், இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே, நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்கலாம் என பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒரு கொலை வழக்கிற்காக மற்றும் ஒரு கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவே பலரும் இந்த சம்பவத்தை பார்க்கின்றனர்.
மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்புடையவையாக இல்லை என்றும் ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட்டும் விசாரணைகளின் மூலமாகவே இதன் உண்மைத்தன்மை வெளிவரும் என்பதே நிதர்சனம்.