யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாது காவலர் மீது கடந்த சனிக்கிழமை யாழ்.நல்லூர்பின் வீதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சூத்திரதாரி நேற்றையதினம் காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சரணடைந்த குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஷ்தரனுடைய வாசஸ்தல த்தில் முற்படுத்திய போது,
அவரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நல்லூர் பின் வீதியில் ஒரு குழுவினர் நின்றிருந்தாகவும், அப்போது கோவில் வீதி வழியாக யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தனது மெய்ப்பாது காவலர் சகிதம் தனது காரில் வந்துள்ளார்.
நீதிபதி செல்வதற்கு வீதி போக்குவர த்தை ஒழுங்கு செய்வதற்காக நீதிபதியின் மெய் ப்பாதுகாவலர்கள் குழுவினர் நின்றிருந்த இட த்துக்கு அண்மையில் சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தவர்களை அப்புறப் படுத்த முற்பட்ட போது, அங்கு நின்ற ஒருவர் பொலிஸாருடன் முரண்பட்டு பின்னர் பொலி ஸாரின் துப்பாக்கியினை பறித்துள்ளார்.
அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிப்பதற்கு நீதிபதியின் ஏனைய மெய்ப்பாதுகாவலர்களும் நீதிபதியும் அந்த இடத்துக்கு சென்று துப்பாக்கியை பறிக்க முற்பட்ட போது குறித்த நபர் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். பின்னரே குறித்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதி மயிரிழையில் உயிர் தப்பியதுடன் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான இரு பொலிஸார் காயமடைந்து அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் யாழ் குடாநாட்டில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
சம்பவதினத்துக்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் தொடர்பாக அன்றைய தினம் அப்பகுதியில் தகராற்றில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். சூத்திரதாரி தலைமறைவாகியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் நேற்றைய தினம் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவர் சம்பவதினத்தன்று தனது மச்சான்களுடன் மது அருந்திவிட்டு சிறிய பிரச்சினை ஒன்றை பேசியவாறு நல்லூர் வீதியில் நின்றதாகவும், எதிரேவரும் பொலிஸாரின் துப்பாக்கியை முடிந்தால் பறிக்குமாறு தனது மச்சான் தன்னிடம் சவால் விட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பொலிஸாருக்கும் தனக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்த போது மேலும் தகராறு ஏற்பட்டதால் தான் சுட்டதாகவும் மச்சான் (ஏற்கெனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்) சொன்னதால்தான் தான் சுட்டேன் என்றும் கூறியுள்ளார்.
அதாவது பொலிஸை மறித்து சுடு பார்ப்போம் என்று மச்சான் அவரிடம் சவால் விடுத்துள்ளார். சவாலை நிறை வேற்றவே துப்பாக்கியை பறித்து சுட்டார்.
அங்கிருந்து சென்று கல்வியங்காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு கல்வியங்காட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியதாகவும் அவர்கள் அடைக்கலம் கொடுக்க மறுத்ததால் யாழ்பாணத்தில் உள்ள சவக்காலை ஒன்றில் தலைமறை வாகி இருந்து விட்டு சாவகச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கும் அவருக்கு அடைக்கலம் அளிக்க உறவினர் மறுத்ததுடன், இவருக்கு ஏற்கெனவே இருந்த கொலை வழக்கின் பிணையாளி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவர் பொலிஸில் சரணடைந்ததாகவும் பொலிஸாரின் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இவரிடம் விசாரணைகளை மேற்கொ ண்ட பொலிஸார் நேற்று மாலை யாழ்நீதவான் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியபோது, நீதவான் அவரை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.