வித்தியா கொலை வழக்கில் சிக்கிய முக்கியமான தடயம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தீர்ப்பாய விசாரணை அடுத்த மாதம் 2ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிறேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ் மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது
விசேட வழக்கு தொடுநரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியிருந்தனர்.
இந்த கொலை வழக்கின் சந்தேகநபர்களை விசாரணை செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா 35வது சாட்சியாளராக நேற்று சாட்சியமளித்துள்ளார்.
வித்தியாவின் கண்ணாடியை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக ஆறாம் இலக்க சந்தேகநபர் துசாந்தன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்ததாக அவரது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் வழிகாட்டலில் அவருடன் புங்குடுதீவிலுள்ள வீட்டுக்கு சென்றதாகவும் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்ட அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா கூறியுள்ளார்.
குறித்த வீட்டின் 11 அடி உயர கொங்கிரீட் பீமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை இதன்போது கைப்பற்றியதாக சாட்சியாளர் கூறியுள்ளார்.
பெண்கள் அணியும் நீள காற்சட்டையினால் சுற்றி பொலித்தீன் பைக்குள் இடப்பட்ட நிலையில் மாணவியின் மூக்குக் கண்ணாடி மீட்கப்பட்டதாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
கண்ணாடி மீட்கப்பட்ட போது இருந்த நீள காற்சட்டை மற்றும் பொலித்தீன் பையை, 157 இலக்கம் ஒன்று குற்றவியல் கோவையின்கீழ் புதிய சான்றுப் பொருட்களாக இணைக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த விண்ணப்பத்திற்கு எதிர் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதனை நிராகரித்துள்ளார்.
167 இலக்கம் ஒன்று நடவடிக்கையின் பிரகாரம் தீர்ப்பு பிரகடனம் செய்வதற்கு முன்னதாக எந்தவொரு சான்றுப் பொருளையும் மன்றுக்கு இணைக்க முடியும் என நீதிபதி இளஞ்செழியன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பிரகாரம் நீளக் காற்சட்டை மற்றும் பொலித்தீன் பை என்பன திறந்த மன்றில் காண்பிக்கப்பட்டதுடன் சாட்சியாளர் அவற்றை அடையாளம் காண்பித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது காணப்படும் சூழலையும் நேரத்தையும் காலத்தையும் கருத்திற்கொண்டு இந்த சாட்சியம் முடிவுறுத்தப்படுவதாக நேற்று மாலை 4.45ற்கு நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய 26ம் திகதி நடைபெறவிருந்த வழக்கு விசாரணை நடைபெறாது எனவும் வழக்கு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila