உடம்புக்கும் உயிருக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறானது என்பதை விளக்குவதற்கு வள்ளுவர் கையாண்ட உதாரணம் அற்புதமானது.
பறவைகள் கட்டுகின்ற கூடுகளைப் பாருங்கள். அந்தக் கூட்டில் பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரிக்கின்றன.
குஞ்சுகள் வளர்கின்றன. சிறகுகள் விரி கின்றன. பறக்கின்ற வல்லமை பெற்ற பறவைக் குஞ்சுகள் கூட்டை விட்டு சிறகை விரித்துப் பறந்து போய்விடுகின்றன.
இவ்வாறு பறந்த குஞ்சுகள் மீண்டும் அந்தக் கூட்டுக்கு வருவதேயில்லை. இவ்வாறாக பறவைக் குஞ்சுகள் கூட்டை விட்டு எங்ஙனம் பறந்து போகின்றனவோ அது போன்றுதான் உடம்பைவிட்டு இந்த உயிர் பிரிந்து போகி கின்றது.
பிரிந்த உயிர் மீண்டும் உடலில் வந்து உட்புகு வதில்லை. இதனையே
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு
என வள்ளுவப் பெருந்தகை கூறிவைத்தார்.
இதை நாம் கூறும் போது, எதற்காக இது? என்று நீங்கள் முணுமுணுப்பதும் கேட்கிறது. உங்கள் கேள்விக்குப் பதில் தந்தே ஆக வேண்டும்.
கூட்டை விட்டுப் பறக்கின்ற பண்பாடு, பறவைகளிடம் மட்டுமே இருப்பதாக நினைத்து விடாதீர்கள். மாறாக கூட்டை விட்டுப் பறக்கின்ற பண்பாட்டு ஒழுக்கம் தனி மனிதர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வீடு என்ற முதன்மைக் கட்டமைப்பு முதல், மக்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைமை வரை இருக் கவே செய்கிறது.
இதைக் கூறுவதற்காகவே வள்ளுவனை வரவழைத்தோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசை அமைத்தன.
தேசிய அரசு அமைவதில் பலரதும் வகிபங்கு உண்டு. அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வகிபங்கு காத்திரமானது.
தேசிய அரசு என்ற கூட்டுத்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் என்று தமிழ் மக்கள் மத்தியில் கூறப்பட்டது.
இதைத் தமிழ் மக்கள் நம்பத் தயாரில்லாத போதும் தமிழ் அரசியல் தலைமை நம்பியது.
இந்த நம்பிக்கை மூலம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துதல் என்ற விடயங்களில் இருந்து இலங்கை அரசு விலக்குப் பெற முடிந்தது.
இவ்வாறாக தேசிய அரசை அமைத்து அதன்மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்ட இலங்கையின் தேசிய அரசு இனி தனது கூட்டில் இருந்து பிரிவதற்குத் தயாராகி விட்டது.
தேசிய அரசு என்ற கூடு தனித்து விடுபட, அதில் இருந்த பறவைக் குஞ்சுகள் தனித் தனியே பறந்து செல்லத் தயாராகின்றன.
கூடவே தேசிய அரசு தமிழ் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கூடுகலைய கலைந்து போகும்.
அந்தப் பதவி இல்லாமல் போக; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டில் இருந்து பறவைகள் தனித்தனியே பறக்கத் தலைப்படும்.
தனித்தனியே பறவைகள் பறந்தாலும் சேர்ந்து கூடு கட்டும் பண்பாடு பறவைகளின் கடமைப்பாடாகத் தொடர்வதும் தவிர்க்க முடியாததுதான்.