பொன்சேகாவின் கருத்து மீது கோத்தாவின் கழுகுப்பார்வை! விரைவில் பதிலடி

போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உரிய வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்துள்ளார் என்றும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால் சாட்சியமளிக்கத் தான் தயார் என்றும் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வினவிய போதே கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், "இராணுவம் போர் இரகசியங்களை வெளியிடக்கூடாது. இதுவே இராணுவ மரபாகும். ஒழுக்கமுள்ள தளபதியொருவர் இதற்குக் கட்டுப்பட்டே செயற்படுவார்.
ஆனால், முன்னாள் இராணுவத் தளபதி போர்க்குற்றச்சாட்டுகள் பற்றி கதைக்கின்றார். அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவே அவர் இப்படிச் செயற்படுகிறார்.
இருந்த போதிலும் அவரின் அறிவிப்பு சம்பந்தமாக ஆழமாக ஆராய்ந்து வருகின்றேன். இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன். அந்தப் பணி முடிவடைந்ததும் ஆக்கபூர்வமான முறையில் அறிக்கையொன்று வெளியிடப்படும். அதுவே அவருக்கான பதிலாகவும் அமையும்” என்று கோத்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த 2015ஆம் ஆண்டு பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
அவரின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையிலேயே அவருக்கு எதிராக பிரேஸிலில் போர்க்குற்ற விசாரணை வழக்குத் தொடுக்கப்பட்டது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான மனித உரிமை அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதால் இது விடயம் குறித்து சர்வதேச நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளன. தனக்குப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் இறுதிக்கட்டப் போரின் போது வன்னிப் படைத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்துள்ளார் எனவும், அதற்குரிய ஆவணங்கள் தன்னிடம் இருக்கின்றன எனவும் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத் தளபதியான பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளதால் அது அரசியல், இராஜதந்திர மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila