இராமாயண இதிகாசத்தில் வாலி வதைபடலம் இன்று வரை வாதத்துக்குரிய பொருளாகவே இருக்கிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால் இராமபிரான் போர்க்குற்றம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டுத்தான். இதை நாம் கூறும்போது இஃது என்ன அபத்தம் என்று இராம பக்தர்கள் கிஞ்சிக்கலாம்.
ஆனாலும் வாலி வதைப்படத்தில் இராமன் போர்க் குற்றம் புரிந்தான் என்ற குற்றச்சாட்டுத்தான் இன்று வரை வாலி வதைபடலம் வாதத்துக்குரிய இடமாக இருப்பதற்கு காரணமாயிற்று.
இராமன் போர்க்குற்றம் புரிந்தான் என்ற வாதத்தை முன்வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. இராம னுக்கு எத்தீங்கும் இழைக்காதவன் வாலி. எந்தத் தீங் கும் செய்யாதவனை கொலை செய்வது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.
எனவே, இராம தரப்புக்கு குற்றமிழைக்காதவனை இராமன் கொன்றொழித்தது போர்க்குற்றத்தின் பாற் பட்டது என்பதால் அது முதற்காரணமாகின்றது.
இரண்டாவது முக்கிய காரணம் போர் விதிமுறை களை மீறி போர் தர்மத்துக்கு மாறாக மறைந்திருந்து வாலி மீது அம்பு தொடுத்தமையாகும்.
இந்த இரண்டு காரணங்களையும் மையப்படுத்தி வாலி வதையில் இராமனும் அவர் தரப்பும் போர்க் குற்றமிழைத்தனர் என்று கூற முடியும்.
அட இராமன் போர்க்குற்றம் இழைத்தான் என்று கூறிவிட்டு இப்போது இராம தரப்பும் போர்க்குற்றம் இழைத்ததாகக் கூறுகின்றீர்களே. இனி வாலி வதை தொடர்பில் இராமரும் இலட்சுமணரும் அவர் தரப்பும் ஐ.நா சபையில் நிறுத்தப்பட்டு அவர்கள் செய்த போர்க் குற்றம் பற்றி வாதிடப்பட வேண்டும் என்றும் கூறுவீர் களோ என இராம பக்தர்கள் நம்மைப் பார்த்துக் கேட்டா லும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால், வாலி மீது மறைந்திருந்து அம்பு தொடுக் கின்ற இராமன் செயலை இலட்சுமணர் உள்ளிட்டவர் கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
அண்ணா போர்க்குற்றம் புரிய நினைந்தனையோ! இது தர்மம் ஆகுமோ! நேருக்கு நேர் போரிட்டால் எதிரில் நிற்பவனின் பாதிப்பலம் வாலிக்குப் போய்விடும் என்பதற்காக,
நீதிநெறி தவறி போர் தொடுப்பது முறையாமோ என்று அறம் கூற வேண்டிய கடமைப்பாடு இலட்சுமண ருக்கும் அவரோடு கூட இருந்தவர்களுக்கும் உண்டு.
இருந்தும் அவர்கள் அதனைச் செய்யாததன் காரணமாக இராமர் மீதான போர்க்குற்றச்சாட்டில் இவர்களுக்கும் பங்குண்டு எனக் கூறுவதில் இலக்கிய தவறு இருப்பதாக யாம் கருதவில்லை.
ஆக, இராமபிரானுக்கு இதுவரை ஒரு மறையை ஏற்படுத்தி நிற்கின்ற வாலி வதையில் ஓர் உண்மை யைக் கூறித்தானாக வேண்டும்.
அதாவது வாலி மீது இராமன் அம்பு தொடுத்த போது நிலத்தில் விழுந்து கிடக்கும் வாலி தன் முழுப்பலத்தை யும் சேர்த்து தன் உடலைத் துளைத்துள்ள பாணத்தை இழுத்து எடுத்துப் பார்க்கிறான்.
அந்தோ! அது இராமபாணம். எக்காலத்திலும் இராம பாணம் தன் உயிரைப் பறிக்கும் என்று இம்மியும் நினைத் திடாத வாலிக்கு எப்படி இருந்திருக்கும்? அந்நேரம் இராம, இலட்சுமணர்கள் வாலி முன் தோன்றுகின்றனர்.
அச்சமயம் இராமனைப் பார்த்து வாலி தர்மம் உரைக் கின்றான் - போர் நீதி உரைக்கிறான். இராமா போர்க் குற்றம் புரிந்தாய் என்று இழிந்துரைக்கின்றான்.
அட, போர்க்குற்றம் இழைத்தாக வாலி கூறினானா? அது எந்த இடத்தில் வருகின்றது என்று யாரும் கேட்டு விடாதீர்கள். போர்க்குற்றம் என்று நேரடியாக கூறா விடினும் அதற்கு ஈடான சொற்பதங்களை வாலி கூறு கின்றான்.
சுருங்கக்கூறின் இரா.சம்பந்தர் ஐயா கூறுவதைப் போல் சமஷ்டி என்ற சொற்பதம் இல்லாவிடினும் அத ற்கு ஈடான அதிகாரங்கள் உண்டு என்று சொல்வதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறாக வாலி பல கூறியும் இராமன் மெளனம் காத்தான். தான் செய்தது போர்க்குற்றம் என்பதை இராமன் தன்னளவில் ஏற்றுக் கொள்கிறான்.
குற்றம் செய்தவன் அதற்குப் பரிகாரம் தேடாவிட்டா லும் மெளனமாகவாவது இருக்கப் பழக வேண்டும். அதை இராமன் செய்தான். அதனால் வாலி மனம் நெகி ழ்ந்து இராமனைக் காப்பாற்ற தானே இராமன் சார்ந்து பதிலுரைக்கின்றான். இதுதான் இராமாயணத்தின் சிறப்பு.
ஆனால் இங்கோ தமிழ் மக்களைக் கொன்றொ ழித்து, பாலகன் பாலச்சந்திரனைச் சுட்டுக்கொன்று, செய் யாத நாசமெல்லாம் தமிழர்க்குச் செய்த படையினரை நாம் காப்பாற்றியே தீருவோம் என்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.
அந்தோ! பாவிகாள் நெட்டூரம் செய்யாதீர். அது முக்காலத்துக்கும் உங்களை அழிக்கும்; கவனம்.