கருணாவோடு இணைத்து பேசப்பட்ட விடயம் எனக்கு தெரியாது! தமிழ்ச்செல்வனின் மனைவி

கருணாவோடு என்னை இணைத்துப் பேசப்பட்ட விடயம் இராமநாதபுரம் முகாமில் இருக்கும் மட்டும் தனக்கு தெரியாது என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார்.
எனினும், முகாமில் இருந்து வெளியில் வந்து மக்களை சந்தித்த போதே இந்த விடயம் தொடர்பில் அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்ளக அரங்கில் அண்மையில் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றி அவர், “இராமநாதபுரம் முகாமில் இருந்து பம்பமடு இராணுவ முகாமுக்கு எங்களை மாற்றினார்கள். அங்கு சிறிய ஒரு அறையில் 500க்கும் மேற்பட்ட பெண் போராளிகளை மிருகத்தை போன்று அடைத்து வைத்தார்கள்.
அந்த முகாமில் இருந்த போது குடி நீர் கூட ஒழுங்காக கிடைக்கவில்லை. மருத்துவ வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் பெண் இராணுவ சிப்பாய் ஒருவர், என்னுடைய கணவராலேயே தனது இரண்டு சகோதரர்கள் இறந்து போனதாக கூறி என்னை திட்டினார்.
ஆனாலும், அதற்கு வாய்ப்பே இல்லையென்று நான் கூறினேன். நாங்கள் உங்களுடைய நிலத்திற்கு வந்து போராடவில்லை. நீங்களே எங்கள் நிலத்திற்கு வந்து ஆக்கிரமிப்பு செய்தீர்கள் என அந்த பெண் இராணுவ சிப்பாயிடம் கூறினேன்.
அவ்வாறு கூறியதும், அவர் என்னை அடிக்க வந்தார். இந்நிலையில், குறித்த முகாமில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து புலனாய்வு துறையினரால் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டேன்.
இந்த சந்தர்ப்பத்திலேயே என்னை பொறுப்பெடுத்தது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச என எனக்கு தெரிய வந்தது. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தை தடுத்து வைத்திருந்தது அவரே.
இதேவேளை, நான் இராமநாதபுரம் முகாமில் தங்கியிருந்து போது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டுச் சென்ற கருணா என்னை வந்து சந்தித்தார்.
அதன் பின்னர் அவரை இதுவரையிலும் சந்திக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருணாவோடு என்னை இணைத்து கதையொன்று கட்டப்பட்டுள்ள விடயம் அந்த முகாமில் இருந்து வெளியில் வரும் மட்டும் எனக்கு தெரியாது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மக்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்ட பின்னரே, இது குறித்த விடயம் எனக்கு தெரியவந்தது. அந்த முகாமில் இருந்த போது பலர் என்னை வந்து சந்தித்து பேசியிருந்தார்கள்.
ஆனால் அந்த 15 நிமிடம் கருணா என்னை வந்து பார்த்து பேசிய சம்பவம் பின்னாளில் இவ்வளவு தூரம் என்னுடைய வாழ்க்கையை உதைக்கப்போகின்றது என உண்மையில் எதிர்ப்பார்க்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila