முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு இன்று எடுத்துகொள்ளப்பட்டபோது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். மாகாணசபைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உரையாற்ற முற்பட்டபோது சபையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, சபை நடவடிக்கைகள் பிற்பகல்வரை ஒத்திவைக்கப்பட்டன. சுமந்திரனை உரையாற்ற அனுமதிக்காது ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். எனினும் அதனைப் பொருட்படுத்தாது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தின் பின் உள்ள ஆசனத்தினருகில் நின்றவாறு சுமந்திரன் தொடர்ந்து உரையாற்ற முற்பட்டார். இந்நிலையில் ஆத்திரமடைந்த ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் சபைக்கு நடுவே வந்து நின்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டவாறிருந்தனர். தேர்தலைப் பிற்போடுவதற்காக அரசாங்கம் புதிது புதிதாக திருத்தங்களைக் கொண்டுவந்து காலத்தை இழுத்தடிப்பதாக அவர்கள் அதன்போது குற்றஞ்சாட்டினர். மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துகொள்வதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்ட கூட்டு எதிரணியினர் அது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆராயவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். அதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதேவேளை சட்டமா அதிபருடன் தொடர்புகொண்டு திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை பெற்ற பின்னர், நண்பகலுக்குபின் சபாநாயகரின் கடும் நிபந்தனைகளுடன் சபை கூடியது. |
மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் நிறைவேற்றியது!
Add Comments