புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான விவாதம் மூன்றாவது நாளையும் தாண்டி நான்காவது நாளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை என்பதை அடுத்தே, விவாதம் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எல்லா உறுப்பினர்களுக்கும் இந்த விடயத்தில் வாய்ப்பு வழங்கப்படுவது நல்லதே.
முக்கியமான தருணம் ஒன்றில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் அறிந்துகொள்வதற்கு அது வசதியாக இருக்கும். இந்த விவாதத்தில் உரையாற்றிய பலரும் இது ஒரு வரலாற்று வாய்ப்பு , இதனைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
அப்படிப்பட்ட வரலாற்று வாய்ப்பை அவர்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்கிறார்களா, தேசியப் பிரச்சினையை இத்தோடு முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் செயற்படுகிறார்களா என்பதே இப்போது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
அந்த வகையில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆற்றிய உரையும் கவனத்திற்குரியது. அரசமைப்பு நிர்ணய சபையினதும், வழிகாட்டல் குழுவினதும் உருவாக்கம் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த அவர், தீர்வு ஒன்றைக் கண்டுவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
“இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்பாட்டை நாம் இப்போதாவது செய்து முடித்தால் அடுத்துவரும் பத்துப் பரம்பரைகளும் எமக்கு நன்றி தெரிவிப்பார்கள்“ என்றார் அவர்.
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இந்தப் பிரச்சினை தொடராமல் தேசியப் பிரச்சினைக்கு அவரால் தீர்வு காணமுடிந்தால் நிச்சயம் அடுத்து வரும் தலைமுறைகள் எல்லாமே இந்தத் தலைமுறைக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், அத்தகைய ஒரு நிலையை நோக்கியா இப்போது நகர்கிறார்கள் என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் உரை எழுப்பும் கேள்வி. அவரது உரையில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய இரண்டு விடயங்கள் இருக்கின்றன.
ஒன்று, சிங்கள தேசிய வாதத்தால் புதிய அரசமைப்புத் தொடர்பில் எழுப்பப்படும் எதிர்ப்புக் குரலுக்கு அடங்கிப் போகும் வகையில், எதிர்ப்பே காட்டாத அவரது போக்கு. இரண்டாவது, தமிழர் தரப்பு விவகாரங்களைப் பொறுத்தவரையில் அதே சிங்கள தேசியவாதக் குரலுக்கு செவிசாய்க்கும் வகையிலான மழுப்பல் பதில்கள்.
கூட்டு எதிரணியினர் எழுப்பியிருக்கும் கரிசனைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் தனது உரையில் தெரிவித்திருக்கிறார். ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கான முன்னுரிமை, வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவற்ற நிலை ஆகியனவற்றைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். அவற்றைச் சொல்லும்போது அவர், “நாங்களும் சிங்கள பௌத்தர்கள்தான். எனவே, நாம் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை இல்லாதொழிக்கமாட்டோம்.
பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை ஒழிக்கவேண்டிய தேவை எமக்குக் கிடையாது“ என்கிறார். அதன் மூலம் சிங்கள தேசியவாதக் குரலுக்கு எதிராகத் தாம் செல்லப்போவதில்லை என்கிற உறுதிமொழியை அவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
இந்த பௌத்த சிங்கள மேலாதிக்க தேசிய வாதம்தான் இலங்கை என்கிற நாட்டில் இனப் பிரச்சினையையும் அதன்வழி ஆயுதப் போராட்டம் ஒன்றையும் உருவாக்கியது. அதாவது இனப்பிரச்சினைக்கான மூல காரணம் அதுதான்.
இதனைத் தமிழர்களில் எவரும், சிங்களவர்களில் ஒரு பகுதியினரும் மறுக்கமாட்டார்கள். அப்படியிருக்கும்போது அந்த பௌத்த சிங்கள தேசிய வாதத்தில் இருந்து கிஞ்சித்தும் கீழிறங்காமல் இனப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்று ரணில் விக்கிரமசிங்க கருதுவாரானால் அது நடக்கக்கூடிய காரியமல்ல.
இந்த அணுகுமுறையில்தான் புதிய அரசமைப்பை உருவாக்கப்போகிறார்கள் என்றால், இனப் பிரச்சினைக்கான மூல காரணம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அவ்வாறாறெனில், ரணில் கூறுவதைப் போல அடுத்துவரும் 10 தலைமுறைகள் அவர்களது செயல்களுக்காக நன்றி கூறாது, தூற்றவே செய்யும்.
இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தீர்வுகளில் இருந்து இந்தத் தீர்வு மேம்பட்டதாக இருக்கிறது என்பதால் அதனை ஆதரிக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கூட நினைக்கலாம். ஆனால், பௌத்த சிங்கள தேசியவாதத்தில் இருந்து இம்மியும் கீழிறங்காமல் கட்டமைக்கப்படும் ஒரு புதிய அரசமைப்பின் மூலம் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் சொல்லமுடியாது.
ஒட்டுமொத்தத்தில் பார்த்தால், நடந்திருக்கக்கூடிய இந்த விவாதம் போற்றத்தக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்வை எட்டும் ஒரு முயற்சி என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படக்கூடியதோ, அடடா! அற்புதம்! என்று சிலாகிக்கக்கூடியதோ அல்ல.
தமிழர்களின் அரசியல் போராட்டம் தொடர்வதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன


