வடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவைத்தலைவரை கோரியுள்ளார்.
வடமாகாண சபையின் 117 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது.இதன் போது மாகாண சபை புதிய உறுப்பினராக பதவியேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சபாரட்ணம் குகதாஸ் தனது முதலாவது உரையை நிகழ்த்தி இருந்தார்.
குறித்த உரையில் ,
வன்னி இறுதி யுத்தத்தில் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் , யுத்த குற்ற மீறல்கள் , முகாம் வாழ்க்கை இராணுவ அதிகார மீறல்கள் என்பன தொடர்பில் உரை நிகழ்த்தினார். அவரது உரையை அடுத்து முதலமைச்சர் , உறுப்பினரின் உரையில் பல விடயங்களை தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் ஒரு சாட்சியமாக தனது உரையை சபையில் நிகழ்த்தி உள்ளார். ஆகவே இந்த உரையின் பிரதியினை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளுருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானத்திடம் கோரினார்.
அதனை அடுத்து அவைத்தலைவர் , உறுப்பினரின் உரையை அனுப்புவதில் எந்த தடையும் இல்லை எனவும் உரையின் பிரதி மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.