கடந்த மூன்று நாட்களின் முன்னர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இராணுவத்தினர் சொந்தமாக்கிக் கொண்டனரா? என்ற செய்தி ஒன்றை குளோபல் தமிழ் பிரசுரித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் மற்றுமொரு விளையாட்டு நிகழ்வுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இராணுவத்தினர் இன்று பயன்படுத்தியுள்ளனர்.
ஒருபுறம் பாடசாலை இடம்பெற்றுக் கொண்டிருந்த மற்றொருபுறம் ஒலிபெருக்கியில் சத்தம் எழுப்பப்பட்டு இராணுவத்தினரின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேவேளை காலைவேளையில் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் இராணுவத்தினரின் பிரசன்னம் காரணமாக அசளகரியங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனை பாடசாலை மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் எதிர்த்து வருகின்றபோதும் தொடர்ந்தும் இராணுவத்தினர் மைதானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இராணுவத்தினர் சொந்தமாக்கிக் கொண்டனரா?
Feb 24, 2018 @ 06:28
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்…
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இராணுவத்தினர் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டார்களா? என்று பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாவட்ட மட்ட மெய் வல்லுனர் போட்டிக்கான காலத்தில் தமது பயிற்சிகளை பாதிக்கும் விதமாக இராணுவத்தினர் தமது நிகழ்ச்சிகளை நடாத்தி வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
போர் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றபோதும் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானம் இராணுவ வசமாகவே காணப்படுகின்றதா என கேள்வி எழுப்பபட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள நகரப் பாடசாலை ஒன்று இராணுவத்தினரிடமிருந்து தமது காணியை மீட்க போராடி வருகின்ற நிலையில் இப் பாடசாலை இராணுவத்தினருக்கு மைதானமத்தை வழங்கி வருகிறது.
மத்திய கல்லூரி மைதானத்தை தமது தேவைகளுக்காக ஆக்கிரமிக்கும் நோக்கில் மைதானத்தின் வளைவு மற்றும் சுற்று மதில்களை இராணுவத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர். இதனால் இப் பாடசாலை வரலாறு முழுவதும் இராணுவத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தும் அபாயத்தை ஈட்டிக்கொண்டுள்ளது.
இதேவேளை கடந்த சில நாட்களின் முன்னர் இப் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றபோது, இராணுவத்தினர் பந்தல் அமைத்து கொடுத்தனர். போட்டி நிறையில் இதற்காக இராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்ளப்பட்டது.
இப் பாடசாலையில் இருந்து ஒரு சில கிலோ மீற்றர் தூரத்தில் இலங்கை இராணுவத்தால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இராணுவத்தினரால் காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்களுக்காக நீதி வேண்டி மக்கள் கடந்த ஒரு வருடமாக இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று இராணுவத்தினருக்கான தேசிய கயிறுழுத்தல் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றது.
இதன் காரணமாக பொது நிறுவனங்களின் நிகழ்வுகள், தமிழ் மக்களின் பண்பாடு சார்ந்த கலை நிகழ்வுகளை முக்கிய காலங்களில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆடிப்பிறப்பை முன்னிட்டு பண்பாட்டு நிகழ்வொன்றை ஒரு நிறுவனம் நடத்த முற்பட்டபோது, இராணுவத்தினரின் வெசாக் நிகழ்வால் மைதான அனுமதி மறுக்கப்பட்டது.
1996ஆம் ஆண்டு சத்ஜெய ஆக்கிரமிப்பை முறியடிக்கும் முகமாக இந்த மைதானம் அமைந்துள்ள பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட பாரிய மண்அணையை உடைப்பதற்காக இந்தப் பகுதியில் பல எண்ணிக்கையான விடுதலைப் புலி உறுப்பினர்கள் தம்மை மாய்த்துக் கொண்ட வரலாறும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாடசாலை நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலரே இந்த விடயத்தை தீர்மானிப்பதாகவும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இந்த விடயம் அதிருப்தியை தருவதாகவும் இப் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கூறினார். இதேவேளை கிளிநொச்சி மத்திய கல்லூரியின் வரலாற்றுக்கு அப கீர்த்தியை ஏற்படுத்தும் இந்தச் செயலை நிறுத்த வேண்டும் என்று பழைய மாணவர் ஒருவர் குறிப்பிடுகிறார்.