தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய காலம்!


Vigneswaran

தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் தொடர்பில் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டிய காலம் இதுவென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
இன்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் எம் முன்னே காணப்படுகின்ற ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் இனங்கண்டு சரியான முடிவுகளை எடுத்து உறுதியுடன் செயற்பட தவறுவோமாயின் கடவுளால்க் கூட எம்மைக் காப்பாற்ற முடியாத ஒரு நிலை ஏற்படும். ஒருசில தனி நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தமிழ் மக்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படக் கூடாது.இதுகாறும் ஆட்டு மந்தைகள் போல மக்கள் தம் பின்னே பின்தொடர்வார்கள் என்று எமது தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். தாம் எதைச் செய்தாலும் மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்ற மமதையில் இருந்தார்கள். தற்போது மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்.
யுத்தத்தின் பின்னர் எமது மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு விடயத்தின் அணுகுமுறையில் நாம் பாரிய தவறு இழைத்துள்ளோமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பது குறித்து எமது திடமான கோரிக்கைகளை முன்வைத்து எமது அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஒரு பேச்சுவார்த்தையை ஏற்படுத்தாமல் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலமைப்பு திருத்தம் அல்லது அரசியலமைப்பு மாற்றத்திற்குள் எமது இனப்பிரச்சனைக்கான தீர்வினையும் கொண்டுசென்றதன் மூலம் தமிழ் மக்களின் பேரம்பேசுஞ் சக்தி முற்றிலும் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்த எமது பிரச்சினை எமது தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக சர்வதேச சமூகத்தின் கைகளில் இருந்து விடுபட்டு இலங்கைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் வெளிப்பாடே மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வலுவிழந்துள்ளமைக்கான காரணமாகும். அதேபோல, யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் முற்றிலுமாக வெளியேற்றப்படவேண்டும் என்று சர்வதேச ரீதியாகமுன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இன்று தனியார் காணிகளில் இருந்து மட்டும் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையாக எம்மவர்களினாலேயே மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாகஇராணுவம் வடக்கு கிழக்கில் பொதுக்காணிகளில் தொடர்ந்து நிலைகொண்டு எதிர்காலத்தில் பாரியளவில் நிரந்தர சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் ஆபத்து உருவாகியிருக்கிறது. காணிகளே எமக்கு எமது தனித்துவத்தைத் தருவது. எமது உணர்வோடு ஒன்றியது. அதே காணிகள் பறிபோகின்றன என்றால் எமது தனித்துவம் அழிந்து வருகின்றது என அர்த்தம்.
இந்த நிலைமைகளை கவனத்தில் எடுத்தே வட மாகாண சபை சில முக்கியமான அரசியல் நகர்வுகளை கடந்த சில வருடங்களில் மேற்கொண்டிருந்தது. குறிப்பாக இனவழிப்பு தீர்மானம் மற்றுந் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்ட முன்மொழிவு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எமது அந்தத் தீர்மானம் மற்றும் முன்மொழிவுகளை சாதகமாகப் பயன்படுத்தி எமக்கான அரசியல் நகர்வுகளை சர்வதேச ரீதியாக பலப்படுத்த முயற்சிக்காமல் துரதிர்ஷ்டவசமாக அவற்றை மழுங்கடிப்பதிலேயே எம்மவர்கள் கவனஞ் செலுத்தி வந்துள்ளனர்.
இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்த நிலையில் ஆக்கபூர்வமான எந்த முன்மொழிவும் தமிழ்க் கட்சியின் தரப்பினால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை. வட மாகாண சபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன்மொழிவை ஆராய்ந்து பார்க்குமாறு கூடக் கேட்பதற்கு எமக்குத் துணிவு இருக்கவில்லை அல்லது மனம் இடங்கொடுக்கவில்லை.
உத்தேச அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையானது எவற்றுக்காகக் கடந்த 70 வருடங்களாக நாம் போராடினோமோ அவற்றை எல்லாம் முற்றாக மறுதலித்து முற்றிலும் சிங்கள பௌத்த மக்களுக்கான ஒரு முன்மொழிவாகவே வெளிவந்துள்ளது. பௌத்த மதத்திற்கு முன் உரிமை எனும் போது ஏனைய மக்கள் இலங்கையில் இரண்டாந் தரமானவர்கள் என்று ஆகிவிடுகின்றார்கள் என்பதே உண்மை. அதன் பின்னர் நாம் இறைமை, தாயகம், சுயநிர்ணயம், சுயாட்சி என்பவற்றை பற்றிக் கதைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மேற்கொண்டு கட்சித் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குவதிலும் பயனில்லை.
இன்றைய ஆட்சியாளர்கள் வடகிழக்கில் 1000 விகாரைகளைக் கட்டுவார்கள். நாளைய ஆட்சியாளர்கள் 10,000 விகாரைகளைக் கட்டுவார்கள். அதன் பின்வருபவர்கள் அவற்றைச் சுற்றிய பிரதேசங்கள் தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்தானவை என்று பிரகடனஞ் செய்வார்கள். இவ்வாறே ஏட்டிக்கு போட்டியாக மாறிமாறி ஆட்சிக்கு வருபவர்கள் தமிழின அழிப்பினூடாக எவ்வாறு சிங்களப் பேரினவாத்தை திருப்திப்படுத்தலாம் என்று “நான் முந்தி நீ முந்தி” என்று செயற்படுவார்கள். இவற்றைத் தட்டிக்கேட்க நீதிமன்றம் சென்றால் “அரசியலமைப்பில் அவ்வாறு தான் உள்ளது; நீங்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் தான்”என்று எமது நீதிமன்றங்கள் கூறி அவற்றுக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்படும் நிலைமையே ஏற்படும். பலவீனமாகவுள்ள எமது தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளும், அபிலாஷைகளும் நூர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுவருகிறது.
ஆகவே, இன்று நாம் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். தமிழ்மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு உறுதியுடனும் பற்றுறுதியுடனும் செயற்பட வேண்டிய காலகட்டம் இது. சலுகைகள் பதவிகளுக்கு அடிபணியாமல் பணியாற்றக்கூடிய அரசியல் வாதிகளை நாம் உருவாக்க வேண்டும். தூரநோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற மக்கள் பிரதிநிதிகளை நாம் உருவாக்க வேண்டும். ஆகவே தான் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளதாகவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila