எமது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வதாக எங்கள் வாக்குகள் அமையட்டும்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Ananthi-Sasitharan
பெப்ரவரி-10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி-அதிகாரங்களை நோக்கியதாக அமைந்துவிடவில்லை. அந்தவகையில் எமது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்யும் வகையில் எங்கள் வாக்குகள் அமைய வேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர்களின் விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் பலமானது தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின் அடிப்படையில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டங்களில் நாம் எதுவித குழப்பமும் இன்றி தீர்க்கமாக முடிவெடுக்கும் வகையில் வழிகாட்டும் உன்னதத் தலைமையின் பிரசன்னம் இருந்திருந்தது.
அவ்வழி நின்று இதுவரை காலமும் எம்மால் தெரிவு செய்யப்பட்டிருந்த தலைமைகள் ஆயுதமௌனிப்பின் பின்னர் பல்வேறு அணிகளாக பிளவுபட்டு நின்று வாக்குக்கேட்கும் அவலம் இன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையானது மக்களாகிய உங்கள் முன் பாரிய குழப்பத்தினையும் அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த குழப்பத்திற்குள் ஆட்பட்டு வாக்களிக்கவே செல்லாது வீட்டுக்குள்ளேயே இருந்துவிடுவோமாயின் இவ் அவலநிலை மேலும் வலுப்பெற்று எமது எதிர்கால இருப்பையே இல்லாது செய்துவிடும்.
ஆகவே, எமக்கு கிடைத்திருக்கும் ஜனநாய உரித்தை பயன்படுத்துவது இன்றியமையாதது ஆகும். அடிப்படையில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது கிராமிய அளவிலான அபிவிருத்தியை மேற்கொள்ளும் கட்டமைப்பினை தீர்மானிக்கும் தேர்தலாக அமைந்துள்ளது. கிராமிய அபிவிருத்தி சரியான முறையில் மேற்கொள்ளப்படும் போதுதான் உண்மையான சமூக அபிவிருத்தி, முன்னேற்றம் என்பன சாத்தியமாகும்.
நிச்சயமாக நீங்கள் ஒரு வரலாற்றுத் தவறை விட்டுவிடக்கூடாது. எனவே, உங்கள் பகுதிகளில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களில் மேற்குறித்த நோக்கில் உங்களுடன் உங்களுக்காகவே சமரசமின்றிப் பயணிக்கக்கூடியவர்களை இனம் கண்டு அவர்களை வெற்றிபெற வைக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன், கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் இன்று 25 சதவிகிதம் பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றாக வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தன்னுடைய சமூகம் சார்ந்து இனம் சார்ந்து அக்கறையுடன் நேர்மையாக விட்டுக்கொடுப்பற்று செயலாற்றக் கூடிய பெண்களையும் வெற்றிபெறச் செய்யுங்கள் என அமைச்சர் மேலும் தெரிவத்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila