ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து வெளியேறிய தென்னிலங்கை அமைப்பு!


Sarath-Weerasekera

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தின்போது கலந்து கொண்டிருந்த தென்னிலங்கை எலிய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களை அடுத்து சரத் வீரசேகர தலைமையிலான எலிய அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளியியேறினார்.
ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச அமைப்பையும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் கடுமையாக சாடிவிட்டே சரத் வீரசேகர தலைமையிலான தென்னிலங்கை எலிய அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளியேறி சென்றனர்.
ஜஸ்மின் சூக்கா பக்கச்சார்பாக நடந்துகொள்வதாக கூறியே சரத் வீரசேகர உபகுழுக் கூட்டத்திலிருந்து வெ ளியேறினார்.
சமாதானத்திற்கும் நிலைமாறுகால நீதிக்குமான சர்வதேச அமைப்பின் தலைவரான ஜஸ்மின் சூகாவின் தலைமையில் நடைபெற்ற இந்த உபகுழுகூட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் தென்னிலங்கையின் எலிய அமைப்பின் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக்கூட்டத்தில் முதலில் உரையாற்றிய ஜஸ்மின் சூகா இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்த வண்ணம் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட தென்னிலங்கையின் எலிய அமைப்பின் பிரதிநிதியான சரத் வீரசேகர குறிப்பிடுகையில்,
நான் யுத்தத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அதில் பங்கேற்றிருக்கன்றேன். முன்னாள் ஐ.நா.வின் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவில் நீங்களும் இடம்பெற்றிருந்தீர்கள்.
இதில் 40 ஆயிரம் பொதுமக்கள் இலங்கையின் யுத்தத்தின்போது கொல்லப்பட்டதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். அதனை தற்போதும் குறிப்பிட்டுக் கூறினீர்கள்.
ஆனால் பிரித்தானியாவின் லோட் நெஸ்பி பிரபு 7 ஆயிரம் பேர் அளவிலேயே யுத்தத்தில் இறந்திருக்கலாம் என தெரிவித்திருந்தார். அத்துடன் ஐ.நா.வின் இலங்கைக்கான ஒரு அதிகாரியும் இதே தகவலை வெளியிட்டிருந்தார்.
இங்கு தகவல்கள் ஒத்தவகையில் இருப்பதை காணமுடிகின்றது. இந்நிலையில் நான் உங்களிடம் எழுப்பும் கேள்வியானது யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக நீங்கள் எவ்வாறு கூறமுடியும்?
அதுமட்டுமன்றி உங்கள் அறிக்கையானது தவறன தகவல்களை உள்ளடக்கியிருப்பதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் நீங்கள் பிரேஸிலுக்கான எமது முன்னாள் தூதுவர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தீர்கள்.
உங்கள் குற்றச்சாட்டு நியாயப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு செய்தீருக்கீர்கள் என்று கூறுகின்றேன் என்று கூறினார். சரத் வீரசேகர இவ்வாறு கூறியபோது குறுக்கிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியான மணிவண்ணன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் காணாமல்போனவர்களாக எவ்வாறு கூறப்படமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இராணுவமே மக்களைப் பொறுப்பெடுத்தது. அங்கு முகாம்கள் சிறைச்சாலைகள்போன்று இருந்தன. அங்கிருந்தே இராணுவம் மக்களை பொறுப்பெடுத்தது. அந்த சிறைமுகாம்கள் ஜெர்மனின் நாசி வதைமுகாம்களுக்கு ஒத்ததாக இருந்தன என்றும் மணிவண்ணன் குறிப்பிட்டார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட பிரான்ஸ் பேரவையின் தலைவர் கிருபாகரன் குறிப்பிடுகையில்; இன்று இலங்கையில் பாதுகாப்பு படையினர் அனைவரும் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். இலங்கை கடற்படை என்ன செய்தது என்று எமக்கு தெரியும். கடந்த 70வருடங்களாக தமிழ் மக்களுக் அநீதி இடம்பெறுகின்றது என்றார்.
இதனையடுத்து மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தற்கான காரணம் தொடர்பில் ஜஸ்மின் சூகா விளக்கமளித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட மற்றுமொரு புலம்பெயர் பிரதிநிதி தற்போது இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்துவதற்கான நேரம் வந்துள்ளது. காணாமல்போனோர் அலுவலகம் ஏமாற்று நாடகமாகவே உள்ளது. இது நீதியைப் பெற்றுக்கொடுக்காது. ஆனால் சர்வதேச நாடுகள் இந்த காணாமல்போனோர் அலுவலகத்தை பாராட்டுகின்றன. அதாவது குற்றங்களை செய்த அரசாங்கமே அதுகுறித்து விசாரணை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முரண்பாடு மிக்கது. நாங்கள் சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் கோரிவருகின்றோம். ஆனால் நடப்பதாக தெரியவில்லை என்றார்.
இதனையடுத்து உரையாற்றிய புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதியொருவர் தன்னுடைய சகோதரர் இலங்கை யுத்ததின்போது பாதிக்கப்பட்டதாகவும் தற்போது இந்த சபையில் இருக்கின்ற சரத் வீரசேகரவே பொறுப்புக்கூறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் எனது சகோதரர் பாதிக்கப்பட்டபோது அப்பகுதியில் கட்டளை அதிகாரியாக எட்மிரல் சரத் வீரசேகரவே இருந்தார். அதற்கான பொறுப்பை தற்போது சரத் வீரசேகர ஏற்றுக்கொள்வாரா? என்றும் அந்த புலம்பெயர் பிரதிநிதி கேள்வி எழுப்பினார்.
இதன்போது குறுக்கிட்ட சரத் வீரசிங்க குறித்த புலம்பெயர் பிரதிநிதி பொய்யான தகவலை குறிப்பிடுவதாகவும் குறித்த காலப்பகுதியில் தான் கட்டளை அதிகாரியாக செயற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் மேலும் பல விடயங்களை அதுதொடர்பில் கூற முற்பட்டபோது உபகுழுக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்த அதிகாரிகள் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் தனது பெயர் இந்த சபையில் பிரயோகிக்கப்பட்டதால் தான் அதற்கு விளக்கமளிக்கவேண்டுமென தொடர்ந்து வாதிட்டார். இது உங்களுக்கான மன்றமல்ல என்று கூட்டத்தை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த சரத் வீரசேகர நீங்கள் புலம்பெயர் பிரதிநிதிக்கு சந்தர்ப்பம் அளித்துவிட்டு ஏன் எனக்கு சந்தர்ப்பம் தராமல் இருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார். எனினும் கூட்டத்தை நடத்திய அதிகாரிகள் கருத்து வெளியிட சந்தர்ப்பம் வழங்க முடியாது என சரத் வீரசேகரவிடம் திட்டவட்டமாக கூறினர்.
இதனையடுத்து சரத் வீரசேகரவுக்கும் உபகுழுக் கூட்டத்தை நடத்திய அதிகாரிகளுக்கும் இடையில் வாதபிரதிவாதம் ஏற்பட்டது. அத்துடன் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் சரத் வீரசேகரவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதன்போது கடும் அதிருப்தியை வெ ளியிட்ட சரத் வீரசேகர புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகள் கூறும் விடயத்தை செவிமடுக்கும் நீங்கள் எங்களை பேச அனுமதிக்காமல் உள்ளீர்கள். இப்படித்தான் நீங்கள் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றீர்கள். உங்கள் ஆதாரங்களும் இப்படித்தான் இருக்கின்றன என்று கூறிவிட்டு சபையை விட்டு எழுந்து வெ ளியேறினார். ஆனால் அதன் பின்னரும் குறித்த உபகுழுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila