புங்குடுதீவு பகுதியிலிருந்து தொடர்ச்சியாக கால்நடைகள் கடத்தப்பட்டு வருகிறன.
குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் புங்குடுதீவில் உள்ள சிலரின் ஒத்துழைப்புடன் மக்களுக்கு சொந்தமான கால்நடைகளை திருட்டுத்தனமாக பிடித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இன்றைய தினம் காலை கெப் ரக வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட மாடுகளை இளைஞர்கள் இணைந்து, துரத்தி சென்று மண்டைதீவு சந்தியில் வைத்து பிடித்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து இன்று நண்பகல் 12 மணியளவில் ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு அருகில் கூடிய புங்குடுதீவு மக்கள், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தார்கள்.
பின்னர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதன் போது கால்நடைகள் கடத்தலுடன் சம்மந்தப்பட்டவர்கள் யார்? என்பதை அடையாளப்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.